Wednesday, April 30, 2008

அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 2

"காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?" - சென்ற பாகம் இங்கே!

துடிதுடித்துப் போய் விட்டான் இராமன்! இவர்கள் இலக்கு இலக்குவனா?
இலக்குவனைக் கொல்வதற்காகவே இப்படி ஒரு திட்டம் தீட்டினார்களா தேவர்கள்? அன்று இந்திரனுக்காக இந்திரசித்தைக் கொன்றவனுக்கு இன்று அதே இந்திரன்-சித்து காட்டுகிறானே?
பட்டாபிஷேகம் பறி போன போது கூட படபடக்காத இராமன் இன்று ஏனோ அப்படிப் படபடக்கிறான்! சிந்தைக்கு இனியவர்களுக்கு மட்டும் ஏதாவது ஒன்றென்றால் நம் சிந்தை ஏன் செயல்படாது போகிறது சில நேரம்?

யமன்: இராமா...இன்னும் தேவ ரகசியம் சொல்லி முடியவில்லை! லட்சுமணா...இன்னும் சில விநாடிகள் நீ வெளியே நில்!
(இலக்குவன் வந்த வழியே வெளியேற...)

நாராயணா, இன்னுமா இந்த மனித வேடம்? சிவபெருமான் தம் பணியைத் துவங்கி விட்டார்! அவதார முடிவின் சூட்சுமங்கள் தொடங்கி விட்டன! இதை உணர்ந்து தயாராகி விடுங்கள்!
மானிடனைக் கேட்டால் தான் பெண்ணுக்குக் கல்யாணம், பையனுக்குக் காதுகுத்தல் என்று ஏதாவது சாக்கு போக்கு சொல்லிக் கொண்டு இருப்பார்கள்! நீங்களுமா? உலகுக்கு என்ன சொல்ல வேண்டுமோ அதைச் சீக்கிரம் சொல்லி விட்டுச் சீக்கிரம் தயாராகுங்கள்!

இராமன்: எல்லாம் சரி தான் தர்மராஜரே! ஆனால் இலக்குவன்.....?

யமன்: சுவாமி, உங்களுக்குமா பந்த பாசம்? நீங்கள் வைகுந்தம் வரும் போது அங்கு ஆதிசேடன் இருக்க வேண்டும் அல்லவா! ஆதிசேடன் அல்லவா இலக்குவனாய் வந்தது! உங்களுக்கு முன் இலக்குவன் விண்ணேக வேண்டும் என்பது விதி!
பாருங்கள், விதிப்பவன் உங்களுக்கே விதியைக் காட்டும் வினோத விதி எனக்கு!
இலக்குவன் விண்ணேக வேண்டும்! சங்கு சக்கரங்களான பரத சத்ருக்கனர்களும் உங்களுடன் ஏகி விடுவார்கள்! பிராட்டியும் தங்கள் வருகைக்குக் காத்துக் கொண்டுள்ளார்! நினைவிருக்கட்டும்! இன்னும் ஒரு பட்ச காலம் (பதினைந்து நாட்கள்) தான் உங்களுக்கு அவகாசம்!
நான் கிளம்புகிறேன்! கடமையால் வந்த கடுஞ்சொற்களுக்கு என்னை மன்னித்து விடுங்கள் இராமா! இலக்குவன் தண்டனையை மறந்து விடாதீர்கள்!

(துர்வாசருடன் இலக்குவன் உள்ளே வரவும், துறவி (யமன்) வெளியேறவும் சரியாக உள்ளது...துர்வாசரும் யமனும் ஒருவரை ஒருவர் உள்ளர்த்தப் புன்சிரிப்புடன் பார்த்துக் கொள்கிறார்கள்...)


துர்வாசர்: இராமா...அகோரப் பசியாய்ப் பசிக்கிறது...நீ உண்ட உணவை உன் கையால் எனக்கு இப்போதே இட வேண்டும்! "முந்தையோர் முறையே முடி சூடிய அந்த நாள் தொட்டு", ஆயிரம் ஆண்டுக்கு ஒரு முறை உங்கள் ரகு குலத்தில் இவ்வாறு உண்பது என் விரதம்!

இராமன்: ஆகா...அப்படியே ஆகட்டும் முனிவரே! இதோ கொண்டு வரச் சொல்கிறேன்! சற்று அமருங்களேன்! நானும் களைத்துப் போயுள்ளேன். மனத்தை அரிக்கும் சில முக்கியமான பிரச்சனைகள் கிடுகிடுவென்று நடந்துவிட்டன...

துர்வாசர்: இராமனா இப்படிப் பேசுவது? விருந்தினர் முன் சொந்த துயரங்களைப் பேசுவதா பண்பு? முதலில் என்னைக் கவனி! அரச-அதிதி முறை தெரியுமல்லவா உனக்கு? நீ அதன் லட்சணம் அறியாதவனோ? இல்லை ஹரி யாதவனோ??

இராமன்: மன்னிக்க வேண்டும் முனிவரே! இதோ உணவு! களைப்பு தீர உண்டு பசியாறுங்கள்!

துர்வாசர்: ஆ...என்ன இது அவமதிப்பு? வெறும் சோறும் கறிச் சேறுமா எனக்கு விருந்து? நான் வந்தது அரண்மனையா இல்லை ஆண்டிமனையா?

இராமன்: முனிவரே! கோபம் வேண்டாம்! நீங்கள் கேட்டது நான் உண்டு, அதன் மீதி மிஞ்சிய உணவு! சீதை சென்றபின் இதுவே எனக்கு உணவாகி விட்டது! என்னால் இளையவனுக்கும் இதையே உண்கிறான்! அருள் கூருங்கள்! இல்லை விருந்து தேவை என்றால் உள்ளே வாருங்கள்...அன்னக் கூடம் செல்லலாம்!

துர்வாசர்: உம்...உன் மனைவி போனபின் உனக்கு மரத்துப் போன உணவா? இதனால் எல்லாம் நீ நல்ல கணவன் என்று சொல்ல மாட்டேன்! நீ உண்டு சேஷமான (மீதமான) உணவே எனக்குப் போதும்!
ஆதி சேஷமே இதை உண்ணும் போது, மீதி சேஷமாய் நானும் உண்கிறேன்!
(முனிவர் உண்டு பசி ஆறியவுடன் இராமன் சில கேள்விகளை முனிவரிடம் முன் வைக்கிறான்!)

இராமன்: முனிவரே...நான் நல்ல கணவன் என்றெல்லாம் என்னைச் சொல்லிக் கொள்ளவில்லை! எனக்குத் தெரியும் என்னைப் பற்றி! பொதுவுடைமைக்குத் தனியுடைமையை விற்ற சிறியேன் நான்!
வாலி வதத்துக்குக் கூட அடுத்த பிறவியில் கர்ம வினையால் நான் கழுவாய் தேடிக் கொள்வேன்!
ஆனால்...சீதை விஷயத்தில் தான் என் மனம் சதா சஞ்சலப்படுகிறது!
எங்கள் இருவரின் பரஸ்பர அன்பையும் ஆழமான காதலையும் எங்களைத் தவிர நாட்டு மக்கள் வேறு யாரும் புரிந்து கொள்ளவில்லையோ? எனக்கு அமைதி காட்டுங்கள், முனிவரே!

துர்வாசர்: கலங்காதே இராமா! உங்கள் இருவருக்கும் உங்கள் இருவரின் அன்பு புரிந்ததல்லவா? அது போதும்! மற்றவர்க்குப் புரிய வைக்க, புரிய வைக்கப் புண்ணாகத் தான் ஆகும்! அதனால் அப்படியே விட்டுவிடு!
உன் காலம் இன்னும் சிறிது நாள் தான்! அமைதி பெறு! இனி வரும் காலங்களிலும் உங்கள் இருவரின் அன்பும் செயல்களும் விவாதப் பொருளாகத் தான் அமையப் போகிறது!

உன் அவதாரம் போதனைக்கு அல்ல! சோதனைக்கு! - சத்திய சோதனைக்கு!
அவரவர் உங்களைச் சோதித்து அவரவர் தீர்ப்பு எழுதிக் கொள்வார்கள்! அந்தத் தீர்ப்பு உங்களுக்கு அல்ல! அவரவர்க்கே தான்!
உங்கள் வாழ்க்கை அதற்கு உதவும் ஒரு சிறு தீத்துளி! அதைக் கொண்டு தீபம் ஏற்றவோ கோபம் ஏற்றவோ, அது அவரவர் விளையாட்டு!

உன் விளையாட்டு முடிந்ததல்லவா? விடை பெற்றுக் கொள்! தனித்தருள் செய்தது போதும்! திருமகளுடன் சேர்ந்து திருவருள் செய்வாயாக! என் நல்லாசிகள்! நாராயண இதி சமர்ப்பயாமி!
(துர்வாசர் விடை பெறுகிறார்...உடனே அந்தரங்க அரச ஆலோசனை சபை கூடுகிறது)



இராமன்: இலக்குவனுக்கு நானே மரண தண்டனை விதிக்கும் தர்ம சங்கடம் இப்போது ஏற்பட்டுள்ளது! முனிவர் இலக்குவனிடமே கேட்டிருக்கலாம்! அரச குடும்பத்தைச் சூழுப் போகும் விபரீதம் அறியாமல் இப்படி எல்லாம் நிகழ்ந்து விட்டது! அப்படியும் போக முடியாமல், இப்படியும் போக முடியாமல் - இது தான் தர்ம சங்கடம் என்கிறார்கள் போலும்! என்ன செய்யலாம் சான்றோர்களே?
(அனைவரும் அதிர்ச்சியில் உறைய...நடந்த நிகழ்வுகள் எல்லாம் உரைக்கப்படுகிறது...)

அமைச்சர் (தயங்கித் தயங்கி): மன்னா...புதல்வர்களுக்கு இப்போது தான் பட்டம் கட்டினோம்! இது அரசியல் சட்டப்படிக் கருணைக் காலம்! நீங்கள் சொல்லும் ஒரு பட்சத்துக்குள்....நம் நாட்டில் இலக்குவனுக்கு மட்டுமில்லை, வேறு எவருக்குமே மரண தண்டனை நிறைவேற்ற முடியாது!
பேசாமல் இளையவரை நிரந்தரமாகக் காட்டுக்கு அனுப்பி விடுங்கள்! உங்கள் பிரிவே அவருக்கு மரண வேதனை தான்!
தர்ம சாஸ்திரமும் இதற்கு ஒப்புதல் அளிக்கிறது! துறவியின் வாக்கைக் காத்தது போலும் ஆகும்! நாட்டின் சட்டத்தை மதித்தது போலும் ஆகும்!

இராமன்: காட்டுக்கும் எனக்கும் இப்படி ஒரு ராசியா? ஹா ஹா ஹா...எனக்குப் பிரியமான அனைத்தும் ஒவ்வொன்றாய்க் காட்டுக்குச் செல்ல வேண்டும் என்பது விதியா? விளையாட்டா? கண்ணா இலட்சுமணா...நீ என்ன சொல்கிறாய்?

இலக்குவன்: அண்ணா...என்ன நடக்கிறது என்றே ஒன்றும் புரியவில்லை! யார் அந்த தேவ ரகசியத் துறவி என்றும் தெரியவில்லை!
ஆனால் தப்ப வழியில்லை என்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது!
மனதார வஞ்சனை செய்ய உனக்கு என்றுமே தெரியாது! அதனால் உன் எண்ணம் எதுவோ அதுவே என் விதி என்று எடுத்துக் கொள்கிறேன்!

ஏதோ ஒன்று நிறைவடையப் போகிறது என்பது மட்டும் நன்றாகத் தெரிகிறது! நான் காடேகி விடுகிறேன்! பின்னர் யாரும் என்னைத் தேட வேண்டாம்!
ஊர்மிளையிடமும், மக்கள் சித்ரகேது/சித்ராங்கதனிடம் சொல்லி விட்டு வந்து விடுகிறேன்! என்னைத் தனியாக நீங்களே காட்டில் கொண்டு போய் விட்டுவிட வேண்டும். இதுவே என் விண்ணப்பம், அண்ணா!

இராமன்: தம்பி...அன்று உன்னை விட்டுவிட்டு நானும் சீதையும் மட்டும் காட்டுக்குப் போக நினைத்த போது சண்டை போட்டாயே? இப்போது மட்டும் ஏன் அமைதி காக்கிறாய்?

இலக்குவன்: கணவனை விட்டுச் சில நாள் மனைவி பிரிந்திருக்க முடியும்! மக்களை விட்டுப் பெற்றோர் சில நாள் பிரிந்திருக்க முடியும்! ஆனால் பச்சிளங் குழந்தை? உன்னை விட்டுப் பிரிந்து இருக்க என்னால் இயலுமோ அண்ணா?
சில நாள் அண்ணியும் உன்னை விட்டுப் பிரிந்து இருக்க முடிந்தது! ஆனால் என்னால் அப்படி இருக்க முடியாது!
நீர் உள எனின் உள மீனும், நீலமும்
பார் உள எனின் உள யாவும், பார்ப்புறின்
நார் உள தனுவுளாய்! நானும் சீதையும்
ஆர் உளர் எனின் உளேம்? அருளுவாய் என்றான்!

ஊருக்குத் தான் நாம் அண்ணன்-தம்பி உறவுக்குள் கட்டுப்பட்டோம்! ஆனால் உண்மையில் எனக்கு நீ யார்?
தலைவன்? குரு? தாய்? தகப்பன்? - இல்லை...எதையும் மறைக்காத ஆருயிர் தோழன்? இல்லை அதையும் தாண்டி...
உன்னுள் ஆழ்ந்தவன் நான்! - ஆழ்வான்! இளையாழ்வான்! - உன் அடி ஒற்றும் அடியவன்! உன் அருளே புரிந்து இருப்பேன்! இனி என்ன திருக்குறிப்பே?

(காட்டுக்கு வெளியே தனிமையில்...அண்ணனும் தம்பியும் மட்டும்...)
இராமன்: இலட்சுமணா....அன்று தனிமையில் சீதை உன் கற்பை வார்த்தையால் சுட்டெரித்தாள்! அன்று குனிந்த உன் தலை, அவள் முன்னர் மட்டும் என்றுமே நிமரவில்லை!
அன்று அவள் எரித்த சொற்களை இன்று சரயு நதியில் குளிர்வித்து விடு! வாய்ச்சொல் தலைச்சுமை! அவள் தனியாகச் சுமந்தது போதும்! இனி நானும் அவளும் உன் பெருமையைச் சேர்ந்தே சுமக்கிறோம்!

இலக்குவன்: அண்ணா...இனி நாம் தான் ஒருவருக்கொருவர் பேசப் போவதில்லையே!
உங்கள் திருக்கரத்தை என் நெஞ்சில் வைத்து அமைதி ஆக்குங்கள்! உங்கள் தோளில் சாய்த்துக் கொண்டு நான் ஆறுதல் அடைய வழிகாட்டுங்கள்!

(இலக்குவன் மெள்ள மெள்ள சரயு நதியில் இறங்குகிறான்...விசுவாமித்திரர் சிறு வயதில் கற்றுக் கொடுத்த ஜலயோகம் செய்து மூழ்குகிறான்...இந்திர விமானம் தோன்றுகிறது! நாகத்துக்குப் பகையாம் கருடன், சேஷனைச் சேவித்து வரவேற்கிறான்...வைகுந்தம் புகுவது மண்ணவர் விதியே!)


(ஆங்கே...அயோத்தியின் சபையில்...இராமன் தனிமையில்...)
குளத்தில் இருந்து கரையில் எடுத்துப் போட்ட பின்னர், நீர்ப் பசை உள்ள அளவு தானே மீனும் இருக்கும்! இதோ இன்னும் ஒரு பட்சம் தான்! நாங்களும் சரயு நதிக்குள் யோக நிலையில் மூழ்கப் போகிறோம்!

உழைக்கும்; வெய்து உயிர்க்கும்;
ஆவி உருகும்; போய் உணர்வு சோரும்;
இழைக்குவது அறிதல் தேற்றான்,
"இலக்குவா! இலக்குவா!" என்று,

அழைக்கும்; தன் கையை
வாயின், மூக்கின் வைத்து அயர்க்கும்;
"ஐயா! பிழைத்தியோ!" ‘என்னும்
மெய்யே பிறந்தேயும் பிறந்திலாதான்.


பெற்றதனால் வந்த பாசம் அன்னை தந்தையர் காட்டுவது - தொட்டு
உற்றதனால் வந்த பாசம் மனைவியர் காட்டுவது! உன்னை நான் பெற்றேனும் இல்லை! தொட்டு உற்றேனும் இல்லை! பின் எதனால் இவ்வளவு ஒட்டுதல்?

மனைவிகளில் நூறு பத்தினிகளைக் காட்டலாம்! உறவுகளில் ஆயிரம் நண்பர்களைக் காட்டலாம்!
ஆனால் உன்னைப் போல் ஒரு தம்பியைக் காட்ட முடியுமா? "அண்ணா" என்ற ஒற்றைச் சொல்லுக்கு உன்னால் அல்லவா உயிர்ப்பு!
நட்பிலும் கற்பைக் காட்டிய காகுத்தா!
நம் இருவர் இடையே உள்ள ஆத்ம உறவை எந்தப் பொருளால் விளக்குவது?

பயந்த தனிமைக் காட்டில், செல்வத்தைத் மறந்து, மனையாளைப் பிரிந்து, தனியே அல்லல் உற்றுக் கிடந்தேன்! அல்லலுக்கு நேரே உறைவிடம் நான்!
ஆனால் உயிருக்கு உயிராய் முன் எப்போதை விடவும் தனிமையில் துணை நின்றாய் தம்பீ! என்னை நீ வந்து உற்ற பின்னர் தான், சீரே உயிர்க்கு உயிராய், பாலைவனத்தில் பன்னீராய்த் தித்தித்ததே!
வாராது வந்த நண்பனாய் வந்த தம்பி.......
உன் பேச்சை மீறி, உன்னை அயோத்தியிலேயே விட்டு வந்திருந்தால்? இன்று இந்த அண்ணன் தான் ஏது??
கேளிக்கையில் உடன் இருப்பவனைக் காட்டிலும் கேட்டில் உடன் இருப்பவன் அல்லவா உற்ற தோழமை கொள்வான்!

காரேய் கருணை ராமானுஜா, இக்கடல் நிலத்தில்
யாரே அறிவார் நின் அருளாம் தன்மை? அல்லலுக்கு
நேரே உறைவிடம் நான்! என்னை நீ வந்து உற்ற பின்பு
சீரே உயிர்க்கு உயிராய், அடியேற்கு இன்று தித்திக்கின்றதே!


மற்றவர்களுக்கு எல்லாம் இராமாவதாரத் தத்துவம் என்பது மானுட தத்துவம்! சரணாகதித் தத்துவம்!
ஆனால் என்னைப் பொருத்தவரை இது இராமாவதாரம் இல்லை! இது இலக்ஷ்மணாவதாரம்! இதன் தத்துவம் கைங்கர்ய தத்துவம்!
தன் கடன் அடியேனைத் தாங்குதல்
என் கடன் பணிசெய்து கிடப்பதே!
தொண்டின் ஆரம்ப நிலை - இறைத் தொண்டு - பகவத் கைங்கர்யம்!
தொண்டின் முழுமை நிலை - அடியார் தொண்டு - பாகவத கைங்கர்யம்!
நன் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு!

என் இராமாவதார ஆசை இதுவே!
நான் இலக்ஷ்மணனாய் மாற வேண்டும், நீ இராமனாய் ஆக வேண்டும்!
அடுத்து நீயே இராமன்! என் அன்புக்குப் பலன் ராமன்! நீ பல-ராமன்!
உனக்கு ஒழிவில் காலம் எல்லாம் உடனாய் மன்னி, வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நான்!

லக்ஷ்மணோ லக்ஷ்மீ சம்பந்ந: செல்வத்துள் செல்வம் கைங்கர்ய லட்சுமி! நானும் திருமகளும் உனக்குக் கைங்கர்யம் செய்து வாழப் போகிறோம்!
இது அவதார முடிவு என்றா நினைத்தாய்? இல்லையில்லை! கிருஷ்ணாவதாரத்துக்கான தோற்றம்! அதை இன்று தான் என் மனதில் சங்கல்பித்தேன்! உறுதி பூண்டேன்!

உலகிற்கு எப்போதும் நீயே இராமனின் அனுஜன்! என் இராமானுஜன்!
இளைய பெருமாள் திருவடிகளே சரணம்!
இலக்குவன் திருவடிகளே சரணம்!!
Read more »

Tuesday, April 29, 2008

பெங்களூர் பதிவர்களா? சென்னைப் பதிவர்களா? - Part 1

வணக்கம் மக்களே!
தாயகப் பயணம் முடிஞ்சி வந்தாப் பிறகு கண்டிப்பா ஒரு பதிவு போடணுமாம்-ல! இந்தப் பதிவின் தலைப்பைப் பாத்துப்போட்டு ஏதோ பட்டிமன்றம்-னு நெனச்சி வந்தீங்கன்னா...
நீங்க நெனச்சி வந்தது சரி தான்! பட்டிமன்றம் தான் இங்கன நடக்கப் போவுது! ஆனா நடுவரா யாரைப் போடலாம்-னு தான் ஒரு சின்னக் கன்பூசன்!

இது மாதிரிச் சூடு பறந்து ஆவியாகிப் பாவியாகிப் போற பட்டிமன்றத்துக்கு எல்லாம் நம்ம கைப்புள்ள தான் எப்பமே நிரந்தர நடுவரு!
ஆனா இப்போ அவரு பெங்களூரு மனைக்கு ஹோகிட்டாரா! அதுனால அவரு தகுதி நீக்கம் செய்யப்பட்டுட்டாரு!
என்ன தான் இருந்தாலும், நடுவர்-ன்னா நடுவுல இருக்கணும்-ல! பெங்களுருக்கும் சென்னைக்கும் நடுவுல இருக்குற ஊரு ஜோலார்பேட்டை தானே? ஜோலார்பேட்டைக் காரவுங்க யாருப்பா? அவிங்களையே நடுவராப் போட்டுறலாம்! என்னா சொல்றீங்க? :-)


சரி...நானு மேட்டருக்கு பர்த்தேனே! ஏப்ரல்-5, 2008...சென்னை காமராசர் உள்நாட்டு வானூர்தி நிலையம்...நம்ம ஆன்மீகப் பதிவரு கேஆரெஸ் தெருப்பாவை பாடிக்கிட்டே கருடா ஏர்பஸ் புடிக்க வராரு! அது என்ன தெருப்பாவை?
சிச்சம் சிறு காலே பெண்களூர் விமானம் ஏறி
மிச்சம் மீதி உள்ள கடலைக்குப் பொருள் கேளாய்!
சொச்சமும் ஜொள்ளி உண்ணும் ப்ளைட்டில் ஏறி நீ
அச்சமும் ஆசையும் கொள்ளாமல் போகாது!


யாகீ கேஆரெஸ்ஸை கிங் பிஷ்ஷர் ப்ளைட்டுலே ஹோகாலிக்க ஹெள்ளிதே?
ஓ அதுவா? கிங் பிஷ்ஷர்-ல தான் நல்ல குயின் பிஷ்ஷர்கள் எல்லாம் இருக்காங்களாம்! சிவப்புக் கலர் தாவணியில சும்மாச் சிலுசிலுக்கறாங்களாம்! அஷ்டே! :-)

நான் வேற 12B-இல் (அட, சீட்டு நம்பர்-ங்க) ஏறி உக்காந்தேனா...நேரம் போவதே தெரியலை! 12B-ன்னாலே ஒரு ராசி தான் இல்ல?
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் பத்து நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

கேஆரெஸ்ஸின் கோணத்தில் - இது என்னா? கோயிலு கொடிமரம்?? :-)

அட, பத்து நிமிசம் தானே பரவாயில்லை! இத்தனை கிங்பிஷ்ஷர் அக்காக்கள் இருக்கும் போது, அங்கிட்டு ப்ளாக் யுனியன் டிடி அக்கா காத்துக்கிட்டு இருந்தா ஒன்னும் கொறைஞ்சிற மாட்டாங்க! :-)
பயணிகள் கவனிக்கவும்: ஓடுபாதையில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விமானம் மேலும் முப்பது நிமிடம் தாமதமாகப் புறப்படும்!

அடப் பாவிங்களா! ஒக்க ரன்வேயில் என்னய்யா ஒக்கனேக்கல் பிரச்சனை? யாராச்சும் தண்டவாளத்தில் தலை கொடுக்கும் போராட்டம், ரன்வேயில் ரயில் மறியல் போராட்டம் நடத்துறாங்களா என்ன?
பெங்களூர் போகாதே-ன்னு கோவி அண்ணா அப்பவே சொன்னாரு! டிபிசிடி வேற என்னைய வட்டாள் நாகராஜ் கிட்ட பாசமாப் போட்டுக் கொடுக்கச் சொன்னதெல்லாம் இப்ப பார்த்து ஞாபகம் வருது! ஆதாரம்+தரவு: இதோ!
தானைத் தலைவி டிடி அக்காவுக்கு ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பிச்சிட்டு, நான் உண்டு என் கடமை உண்டு-ன்னு "சிவனே"-ன்னு (சைட்டிக்கிட்டு) இருந்தேன்!

ஒரு வழியா ஒக்க ரன்வே பிரச்சனை முடிஞ்சி விமானம் கெளம்பியது!
ஆனா அப்ப யாருக்குத் தான் தெரியும், ஒக்க ரன்வே பிரச்சனை மட்டும் இல்ல, ஒக்க-னேக்கல் பிரச்சனையே தீரப் போகுது-ன்னு? எல்லாம் கேஆரெஸ் பெங்களூருவில் கால் வைக்கும் நேரம்! சாந்தி நிலவுது! சரோஜாவும் நிலவுது! :-)
வெஜ்ஜி சான்ட்விச் வித் மெட்ராஸ் காபி சாப்பிட்டு முடிக்கக்குள்ளாற ஊரு வந்துருச்சி! சிகப்பு ரோஜாக்களுக்குப் பிரியா விடை கொடுத்திட்டு வெளிய வந்தாக்கா..........நம்ம டிடி யக்கா........யக்காஆஆஆ...தம்பீஈஈஈஈ...

"எப்படித் தம்பி இருக்க?"

"எப்பிடிக்கா இருக்கீக? சாரி ப்ளைட் லேட்டு!"

"அலோ இதான் கோட் வோர்டா? நீ தான் கேஆரெஸ்-ன்னு எப்படி நம்புறது? பெங்களூரில் போலிப் பிரச்சனை ஜாஸ்தி...தெரியுமா?"

"யக்கா...இதுக்காக என்னை ஏர்போர்ட் புல் தரையில சாய்ஞ்சி படுத்துக் காட்டச் சொல்லப் போறீங்களா என்ன? வேணாம்க்கா இந்த தண்டனை!"

"அதுக்குத் தான் கடவுச் சொல் கேக்கறேன்...ஒழுங்காச் சொல்லு"

"சர்வேசன்=a+b!"

"கரெக்ட்! இதோ என் கோட் வோர்ட்...வவ்வால்=a+b+c! என்னா சரியா?"

"மார்வலஸ்! அசத்திட்டீங்க அக்கோவ்"

"வாங்க கேஆரெஸ்! பெங்களுருக்கு உங்கள் வரவு நல்வரவாகுக! நேத்து வரை பெய்ஞ்சுகிட்டு இருந்த மழை நீங்க வந்ததும் நின்னுருச்சு பாருங்க! வண்டியில் உக்காருங்க! வூட்டுக்குப் போகலாம்!"


வழியில் கொரமங்கலா கடந்தவுடன் என் பழைய பெங்களூரு வாசம் எல்லாம் சுவாசம் வீச...பல விசயங்களைக் கதைத்துக் கொண்டே ஆர்.டி நகர் போய்ச் சேர்ந்தோம். வீட்டில் புதிய சோனி இல்லத் திரையரங்கு! அதில் இன்னிசை ஒலிக்க...அங்கே ப்ளாக் யூனியனின் சுமதி அக்காவும் சேர்ந்து வரவேற்க...
அடடா என்ன பாச மழை! இந்த மழைக்குத் தான் அந்த மழை நின்னுருச்சு போல! சுமதி யக்கா மட்டும் றேடியோல வேலைக்குச் சேர்ந்தாங்கன்னு வைங்க...அந்த நான் ஸ்டாப் எஃப்.எம்-ல நான் ஸ்டாப் ஆயிடுவேன்! :-)

ஷைலஜாவின் அட்சய மைசூர் பாத்திரம்

ஷைலஜா மைசூர்பாக்கு கொடுப்பாங்களோ மாட்டாங்களோ-ங்கிற (அவ)நம்பிக்கையில், சுமதியே ஆன்மீக அல்வா கிண்டிக்கிட்டு வந்தாங்க! சூப்பரோ சூப்பர்! டிடி அக்கா வீட்டிலேயே மதியச் சாப்பாடு ஒரு வெட்டு வெட்டிட்டு...திரும்பிப் பார்த்தா...
மிஸஸ் Congeniality & மிஸ்டர் அம்பி! கூடவே அவர் தம்பி கணேசன்! அட்ரா சக்கை! இனிய முகமன்கள்!
மாவு அரைச்ச கையோட வெள்ளையும் சொள்ளையுமா வந்திருந்தாரு அம்பி! நமக்கு இந்தப் பதிவர் அம்பியைக் கண்டாலே உள்ளூர ஒரு பயம் தான்!

மாவுக்குப் பதம் கேட்டே நம்மள பதம் பார்த்துடுவாரு! ஜிரா வேற என் சம்பந்தமா ஏதோ இவருக்கு ஏதோ அசைன்மென்ட் கொடுத்திருந்தாரு! ஆனா அது எல்லாமே மாயக் கண்ணன் முன் நிக்குமா என்ன? மாயமா மறைஞ்சு போச்சு! திருமதி& திரு அம்பி மிக அழகான பொம்மை ஒன்றைப் பரிசாகக் கொடுக்க...முருகா முருகான்னு சொல்லிக்கிட்டே பொட்டியைத் தொறந்து பார்த்தா அதுல கண்ணன் சிரிக்கிறான் :-))

ஒரு வழியா எல்லாரும் கும்மிக்கு செட்டில் ஆக... கும்மியடி கர்-நாடகா முழுதும் குலுங்கிடக் கை கொட்டிக் கும்மியடி-ன்னு பாடிக்கிட்டே வந்தாரு நம்ம பாசமிகு மெளலி அண்ணா என்னும் மதுரையம்பதி! அதான் சென்னை உண்ணாவெரதத்துல சத்யராஜ் குலுங்கினது போதாதா? இனி நாங்க வேற என்னாத்த கும்மியில் குலுங்கறது? :-)

குலுங்கி அடித்த கும்மீஸ் இதோ:
* பதிவுகளில் மாற்றுக் கருத்துக்கள் எழுந்தா பின்னூட்டம் இடறதா வேணாமா? யார் பதிவுகளில், எப்படிப்பட்ட பதிவுகளில் மாற்றுப் பின்னூட்டத்தைத் தைரியமாக இடலாம்? அதுவும் பெண் பதிவர்களின் விவாத எல்லை எது வரை இருக்கும்னு நினைக்கறீங்க?
* ஆன்மீகப் பதிவுகளில் நகைச்சுவை செய்தால் பிடிக்குதா? பலரையும் அடையும் பொருட்டு அடர்த்தி குறைப்பது ஓக்கே தானா?
* நாகரீக மாற்றங்களுக்கான விடைகள் நம்ம கிட்டயே இருக்கு! நமது கலாச்சாரம் பண்பாட்டுக் கதைகளை current day context-இல் எப்படிக் கொடுக்கலாம்?

- இப்படிப் போன விவாதம்...அப்படியே லால் பாக்குக்குத் தாவியது! மெளலி அண்ணா வண்டியில் கும்மிகள் தொடர....அண்ணா...சேப்புக் கலர் Maruti Swift நல்லாக் கீதுங்கோ!


ஜீவ்ஸ் அண்ணாச்சி பதிவுல கொடுக்கன்னே வளர்க்கும் ஸ்பெசல் செடி! :-)

லால் பாக்கில் உரக்கத் தமிழ் பேச முடியுமா? பதிவர்கள் மாறு வேசம் கட்டிக்கிட்டு தான் மீட் போடணுமா? பேசாம எல்லாரும் அனானியா கலந்துக்கிட்டா என்ன? கன்னட மணம்-னு சொல்லிக்கலாமா? இப்படி ஒரு வித மனப் பிராந்தி, ஜின்னு, ரம்மு-ன்னு லால் பாக் கண்ணாடி இல்லத்தில் அனைவரும் கூட...அங்கே...

* பெங்களூரிலும் ஒரு காமிராக் கவிஞர்! Digital SLR ராயல் ராமு!
* கங்கைக் கரை காமிராக் காட்சி நிபுணர்! எங்கள் சங்கத் தமிழ், சங்கத் தல, சங்க நிதி, அண்ணன் கைப்புள்ள
* மஞ்சள் பட்டு உடுத்தி, மஞ்சள் மைசூர் பாக் வந்திருக்குன்னு குறிப்பாலேயே உணர்த்திய கவிக்குயில் ஷைலஜா
* PIT-இன் founding father...வெண்பாவிற் ஜீவ்ஸேந்தி...அண்ணியார் மற்றும் மழலைப் பதிவருடன்,
* நம்ம நாட்டு நடப்பு அரவிந்தன்
* மெளலி அண்ணாவின் தொலைபேசியில் கொஞ்ச நேரம் கூடல் குமரன்

ராயலின் கோணத்தில் லால் பாக் கண்ணாடி அறை

கேஆரெஸ்ஸின் செல்பேசி சிணுங்கியது...
"அலோ...நான் சிங்கையில் இருந்து குசும்பன் கல்யாணத்துக்காகச் சென்னை வந்திருக்கேன்! நீங்க வந்ததும் வராததுமா சென்னைப் பதிவர்களைக் கூடப் பார்க்காம அப்பிடி என்ன பெங்களூரூக்கு ஓட்டம்? உங்க பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
தமிழுக்கும் தமிழ்ப் பதிவருக்கும் துரோகம் செய்து விட்டு கன்னட வீட்டில் கைகுலுக்கவும் விருந்து சாப்பிடவும் போனீங்களா?"

"ஏங்க...அப்பிடி எல்லாம் ஒன்னும் இல்லீங்க! நான் மறத் தமிழ் பதிவனுங்கோ! இங்கன இருக்குற எல்லாரும் தமிழ்ப் பதிவரு தானுங்கோ! நாங்களே பயந்து பயந்து லால் பாக்குல மைசூர் பாக்கு சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம்! நீங்க வேற!"

"மறுபடியும் பூனைக்குட்டி வெளியில் வந்து விட்டது!
ஏன் தமிழ்நாட்டுல பாக்கு வெளயலையா? பாக்குக்கு கமுகு-ன்னே ஒரு தூய தமிழ்ப் பேரு இருக்கு தெரியுமா? மைசூர் பாக்காம் மைசூர் பாக்கு! ஏன் ஒரு மைலாடுதுறைப் பாக்கு, மதுரைப் பாக்கு-ன்னு சாப்புடறது?"

"ஆகா..."

"என்ன ஓகோ? ஒங்க மேல ஒங்க நண்பர்களே கோவமா இருக்காங்க! லக்கி அண்ணாச்சி, தேசிகன், தேவ் அண்ணாத்த, சிபி, சந்தோஷ், இம்சை அரசி, JK, G3-ன்னு இவிங்க கோபத்துக்கு எல்லாம் அளவே இல்ல!
நீங்க சென்னைக்கு எப்படித் திரும்பி வரீங்கன்னு பார்த்துடலாம்! அப்படியே அங்க இருந்தே பிளைட்டு புடிச்சி நியூயார்க் போய்ச் சேருங்க!"

"அலோ...இவ்ளோ நல்லவரா இருக்கீங்களே! யாருங்க நீங்க?"

"அது எதுக்கு உங்களுக்கு? அனானி பவர் தெரியும்-ல?
சரி சரி....அங்க உங்க கூட யாரெல்லாம் இருக்கா? கொஞ்சம் விலகுங்க! யாரும் தெரிய மாட்டங்கிறாங்க! - ம.த.செ.வி"

"ஆகா...ம.த.செ.வி-யா? இது என்னப்பா புதுசா?"

"நான் தான் கோவி கண்ணன் பேசறேன்!"
(தொடரும்...)
Read more »

Monday, April 14, 2008

இராமநவமி: அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணனே ராமன்! - 1

காவியத்தில் இராமனைப் பிடிக்குமா, இலக்குவனைப் பிடிக்குமா-ன்னு பல பதிவர்களைக் கேட்டுப் பாருங்க! இலக்குவனைத் தான் பிடிக்கும்-னு சொல்லுவாய்ங்க! ஏன் தெரியுமா?
ஹிஹி...இராமனைச் சுத்தமாப் பிடிக்காது! அவர்களைப் பொறுத்தவரை புனித பிம்பம்! Unrealistic:-)
ஆனா இலக்குவன் அப்படியில்லை! கோவக்காரன்! Straightforward! :-)

சரி இலக்குவனைப் பிடிக்கும்-னு சொல்றீங்களே, இலக்குவன் செய்தது போல் நீங்களும் செய்வீங்களா-ன்னு கேட்டுப் பாருங்க! எல்லாரும் ஓடி விடுவோம்!
உடன் பிறந்த பரதனும் சத்ருக்கனனும், உடன் பிறவாத குகனும் சுக்ரீவனும் வீடணனும் எவருக்கும் இராமானுஜன் என்ற பெயர் இல்லை! இளைய பெருமாள் இலக்குவன் ஒருவனுக்கே உண்டு!

எனக்கும் இலக்குவனைத் தான் ரொம்ப பிடிக்கும்! ஆனா மேற்சொன்ன காரணங்களுக்காக அல்ல! இராமன்+தம்பி = இராம+அனுஜன் = இராமானுசன்!
உலக வழக்கத்தைப் பொறுத்தவரை தாய் என்றால் அது பொம்பளை! தம்பி என்றால் ஆம்பிளை! இப்படிப் பலப்பல உறவுகள்!
ஆனால் உண்மையான உறவு...பாலாலோ, பேராலோ அமைவதில்லை! உள்ளத்தால் அமைவது!
தாய்மையும் தாண்டிய மாறா அன்பு இலக்குவன் கொண்டது! அதைக் கீழ்த்தரப்படுத்தியவர் எவராயினும், அன்னை திருமகளே ஆயினும், அப்பன் பெருமாளே ஆயினும், அவர்களும் அல்லல் உற்றார்கள்!

அண்ணன்-தம்பி உறவு பற்றித் தனியாக ஒரு தொடர் பதிவு வரும்! அப்போ அண்ணன் செஞ்ச தப்பையெல்லாம் ஒவ்வொன்னாப் பட்டியல் போட்டுத் தாக்கலாம்! இன்னிக்கு விட்டுருவோம்! என்ன இருந்தாலும் இன்று பிறந்தநாள் பையன் அல்லவா இராமன்? :-)

இப்ப மேட்டருக்கு வருவோம்! அது என்ன...அன்புத் தம்பியைக் கொன்ற அண்ணன் இராமன்? இலக்குவனைக் கொன்றது இராமனா? அடப் பாவி! இராமனைப் புனித பிம்பம்-னு இல்ல எல்லாரும் நினைச்சிக்கிட்டு இருக்காங்க! அவனா இந்த அடாத செயலைச் செய்தான்?

இல்லை சேது, இராமர் பாலம்-ன்னு நடக்குற பல விஷயங்களால், இந்த மாதிரி ஒவ்வொன்னா யாராச்சும் கிளப்பி விடுறாங்களா? இப்போ கொலைகாரன் என்ற பட்டம் வேறா இராமனுக்கு? சேது வந்தாலும் வந்தது! சே(த்)து வச்சி வாங்குறாங்களா இராமனை? :-)
இல்லையில்லை! இலக்குவனைக் கொன்றது இராமனே தான்! பாக்கலாம் வாங்க!


ராமாயணத்தின் கடைசிக் கட்டம்! (உத்தர ராமாயணம்) - அவதாரம் முடியப் போகும் கால கட்டம்!
மனிதனாகப் பிறந்த இறைவன், சராசரி மனிதனாகவே வாழ்கிறான்! தான் செய்த பாவங்களின் பழியை எல்லாம் ஒளிக்காது மறைக்காது அடுத்த பிறவிக்கும் சேர்த்தே சுமக்கிறான்! அபார தெய்வ சக்தியை எல்லாம் எதுவும் காட்டவில்லை!

அதான் அவதார நோக்கம் நிறைவேறி விட்டதே! இன்னும் திரும்பி வராமல் இருக்கிறானே! தூக்கம் கலைந்தால் விழிப்பு தன்னால் வரவேண்டுமே! அது தானே உயிரின் இயக்கம்! இன்னும் இராமன் விழித்த பாடில்லையே! தான் இறைவன் என்று அவனுக்குத் தெரியுமோ தெரியாதோ? - இப்படி ஒரு சந்தேகம் வானுலகத்தினருக்கு! இராமனிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லி வருமாறு யமனை அனுப்புகிறார்கள்! அவனும் பழுத்த துறவி போல் வேடம் இட்டுக் கொண்டு அயோத்தி நகருக்குள் வருகிறான்!

அயோத்தியின் அரண்மனைக்குள் நுழைந்ததும், சங்கை முழங்குகிறான்!
அதி முக்கியமான தேவ ரகசியத்தை அரசனிடம் "மட்டும்" தனியாகப் பேச வேண்டும் என்று வேண்டுகோள் வைக்கிறான்! தம்பிமார்கள், அமைச்சர்கள் கூட இருக்கக் கூடாதாம்! சேதி இராமனின் காதுக்கு வருகிறது! புன்முறுவல் பூக்கிறான் இராகவன்.
"இலக்குவா, நீயே சென்று நம் வெளிவாயிலில் காவல் இரு! இந்த அறைக்குள் வேறு எவரும் நுழைய வேண்டாம்! சேவகர்களும் எல்லாரும் வெளியேறி விடுங்கள்!"

இலக்குவனுக்கு எப்பவுமே சந்தேகம் தான்! இராமனை மீதைத் தவிர!
"அண்ணா, அத்தனை பேரும் வெளியேறிவிட்டு, நீங்கள் மட்டும் முன்பின் தெரியாத ஒரு துறவியிடம் உரையாடுவது எனக்குச் சற்று அச்சமாகவே இருக்கிறது! அதான் முன்பே ஒரு முறை பட்டோமே! அது தெரிந்தும் இப்படி வலியச் சென்று முன்பின் தெரியாதவர்களிடம் அன்பு காட்டுகிறீர்களே! இதெல்லாம் தேவையா?
வேண்டுமானால் உள்வாயிலில் காவல் இருக்கிறேன்! நீங்கள் கூப்பிட்ட கணத்தில் ஓடி வரும் தொலைவில் இருப்பது தான் முறை!"


யமன் மனதுக்குள் சிரித்துக் கொள்கிறான்!
("அடேயப்பா! இராமனைக் கண்ணுக்குள் வைத்துக் காப்பது இவன் தானோ? இருக்கட்டும் இருக்கட்டும்! இவனைக் கவனிக்க வேண்டிய விதத்தில் கவனித்துக் கொள்ளலாம்!")

"ஐயா, இது பரம தேவ ரகசியம்! அதனால் தான் சொல்கிறேன். எவரும் அறியாமல் கூட கேட்டுவிடக் கூடாது! எனக்கு ஒரு வாக்குறுதி கொடுங்கள். நாம் உரையாடிக் கொண்டிருக்கும் போது, யாரும் உள்ளே வரக் கூடாது! அரசாங்கம் சார்பாக யாரும் ஒற்றுக் கேட்கவும் கூடாது! அப்படியே காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்!"

இராமனுக்குச் சிரிப்பு வருகிறது!
"அடேயப்பா...இவ்வளவு பீடிகையா! என் தம்பிக்குத் தெரியாத ஏதும் எனக்கும் தெரிய வேண்டாம் என்று நான் பொதுவாக இருந்து விடுவேன்! ஆனால் தேவ ரகசியம் என்று சொல்வதால்....
சரி, அப்படியே ஆகட்டும்! லக்ஷ்மணா, காவல் பலமாக இருக்கட்டும்! உள்வாயிலில் உளவாய் நீ!"

அண்ணன் ஆணையைச் சிரமேற் கொண்ட தம்பி, உள்வாயிலில் காவலுக்கு நிற்கிறான்!
நின்றால் குடையாம், இருந்தால் சிங்காதனமாம், நடந்தால் மரவடியாம் இலக்குவப் பெருமாளுக்கு இடக்கண் துடிக்கிறது...இடுக்கண் அழைக்கிறது!
என்னமோ நிகழப் போகிறது! அனைவரும் வெளியேறிவிட, கொலு மண்டபத்தில் பேச்சு மூச்சு இல்லை!

யமன் வந்த வேலையைத் துவக்குகிறான்.
"பெருமாளே! இது என்ன கொடுமை! உம்மை அறியாமல் நீரே இப்படி வாளா இருப்பதா?
அவதார நோக்கம் தான் பூர்த்தியாகி விட்டதே! மீண்டும் வைகுந்தம் ஏகுங்கள்! இதைச் சொல்லத் தான் சிவபெருமானே அடியேனை அனுப்பி உள்ளார்!
மனித உயிர்களைக் கவர்பவன் நான்! தர்மராஜன்! அதே பொறுப்போடு மனிதனாய் இருக்கும் உமக்கும் சொல்கிறேன்! உமது காலம் முடியப் போகிறது! உம்...கிளம்புங்கள்!"

"யமதர்மரே, வணக்கம்!
என் முடிவினை அந்தரங்கமாக அறிவித்து உங்கள் கடமையைச் செய்து விட்டீர்கள்!
எனக்கும் எந்த ஆசையும் பெரிதாக இல்லை! என் சீதையும் என்னை விட்டுப் போய் விட்டாள்! உலகத்துக்காக உத்தமியின் இதயத்தை ஒரு நாள் நோகடித்தேன்! அவளுடன் என் திரு நாள் சென்று விட்டது!
ஏழ் இரண்டு ஆண்டு யான் போய் எரி வனத்து இருக்க என்றேன்
வாழியாய் அரசர் வைகும் வள நகர் வைகல் ஒல்லேன்
பாழி அம் தடந் தோள் வீர, பார்த்திலை போலும் அன்றே
யாழ் இசை மொழியோடு அன்றி, யான் உறை இன்பம் என்னோ?

அவள் இல்லாமல் தனியாக எனக்கு இன்பங்கள் எதுவும் தேவை இல்லை! அரச பொறுப்பில் உள்ளவர்கள் மண்மகளையும் பற்றி, குடும்பத்தின் திருமகளையும் பற்றினால் என் போன்ற நிலைக்குத் தான் ஆளாவர்கள் போலும்!
நான் ஒதுக்கினாலும் என்னை ஒதுக்காத அன்புச் செல்வம் சீதை; அவளை மேலுலகிலாவது சந்திக்கிறேன்! புறப்படலாமா?
அதற்கு முன் என்னுயிர்த் தம்பியிடம் மட்டும் ஒரே ஒரு வார்த்தை!......"



அழைக்கவே இல்லை! அதற்குள் "அண்ணா....அண்ணா....." என்று இலக்குவன் காவலை விட்டு ஓடோடி வருகிறான்!

"அண்ணா, துர்வாச முனிவர் அரண்மனைக்கு வந்துள்ளார்! நான் எவ்வளவோ சொல்லியும் கேளாமல், உங்களைப் பார்த்தே ஆக வேண்டும் என்று ஒற்றைக் காலில் நிற்கிறார்! அவரிடம் நீங்கள் அந்தரங்கப் பேச்சு வார்த்தையில் இருப்பதாகச் சொல்லிச் சற்று நேரம் காக்கச் சொன்னேன்! அயோத்தியையே சபித்து விடுவதாக மிரட்டி உள்ளே நுழையப் பார்க்கிறார்!"

"ஆகா, என்ன காரியம் செய்தாய் லக்ஷ்மணா? அயோத்தியின் சீருக்கு ஊறா? அயோத்திக்காக அல்லவா என் அன்னத்தையும் அனைத்தையும் இழந்தேன்! பொதுவுடைமையைப் பற்ற தனியுடைமையை விற்றேன்! இப்போது முனிவர் எங்கே இருக்கிறார், சொல்?"

"நீங்கள் தேவ ரகசியம் பேசும் போது குறுக்கே நுழைவார் முனிவர்! கொடுத்த வாக்கின் படி அவரை உங்களால் கொல்ல முடியுமா? மகரிஷிக்கு மரண தண்டனையா? அதைச் சொல்லத் தான் ஓடோடி வந்தேன் அண்ணா! முனிவர் வந்து கொண்டே இருக்கிறார்! இவரைச் சீக்கிரம் பேசி அனுப்பி விடுங்கள்!!"

யமன்: "அட! என்னை அனுப்புவது இருக்கட்டும் இராமா! தேவ ரகசியம் பேசும் போது அத்து மீறி வந்த இலக்குவன் இவன்! முதலில் இவனை அனுப்பு!
என்ன பார்க்கிறாய்? கொடுத்த வாக்கின் படி முதலில் இவனுக்கு மரண தண்டனையை விதிப்பாய் இராகவா!"

இராமன்: "ஆகா...என்ன சொல்கிறீர்கள்!
இலக்குவன் என் காவலன்! அயோத்தியின் கோவலன்! அவனைக் கொல்வதா? என்ன குற்றம் செய்தான் அவன்? துர்வாசருக்கு முன்னால் வெறும் சேதி அல்லவா கொண்டு வந்தான் இளையவன்?"

யமன்: "அதெல்லாம் எனக்குத் தெரியாது! நான் இன்னும் ரகசியத்தை முழுமையாகச் சொல்லவில்லை! அதற்குள் அத்து மீறி வந்தான் உன் தம்பி!
காவலை மீறி எவர் வந்தாலும் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்பதே வாக்கு! இராமா....கொடுத்த வாக்கை கொல்லப் போகிறாயா? இல்லை இலக்குவனைக் கொல்லப் போகிறாயா?"
(தொடரும்...)
Read more »

Wednesday, April 09, 2008

PIT போட்டிக்கு அல்ல! ராயல் ராமின் "தனிமை"!

மக்களே! ரொம்ப நாளா PIT போட்டியில கலந்துக்கணும்-னு நெனச்சிக்கிட்டு இருந்தேனா? கடந்த வாரயிறுதியில் பெங்களூர் பதிவர் சந்திப்புக்குப் போனேனா? அங்கிட்டு ஒரு ஷாட்!
அட நம்ம சங்கத்தின் நிரந்தரச் சிங்கத்தைப் பாருங்க! இதுக்கு மேல நான் என்னத்த சொல்ல!

PIT-இன் இந்த மாதத் தலைப்பு ஏதோ "தனிமை" யாம்-ல!
சிங்கம் இப்படித் "தனிமை"யில இருக்குறத பார்த்து, எனக்கு ரத்தக் கண்ணீரே வந்துருச்சி! வாடிய புலியைக் கண்ட போதெல்லாம் வாடினேன்! ஓடிய சிங்கத்தைக் கண்ட போதெல்லாம் ஓடினேன்!
நீங்களே பாருங்க மக்கா, ராயலின் தனிமையும் ஏக்கத்தையும்! :-(

ராயலுக்கு என்ன ஒரு ஏக்கம்! என்ன ஒரு பார்வை! என்ன ஒரு தவிப்பு! என்ன ஒரு சலிப்பு!
இதைப் பார்த்துவிட்டு நீங்க சும்மா போக மாட்டீங்களே? அதுக்கு ஒங்க மனச்சாட்சி எடம் கொடுக்காதே? ராயலுக்கு உதவிக் கரம் நீட்ட துடிக்குமே! தலைக்குள்ளாற ஆயிரம் சிவகாசி பட்டாசு வெடிக்குமே?

அந்தச் சேப்புச் சொக்காக்காரன் மட்டும் பெஞ்சில் ஒக்காந்துக்கிட்டு் ஜாலியா இருக்க,
எங்கள் தங்கம், சங்கத்தின் சிங்கம், நம்ம ராயலு தரையில் உட்கார்ந்து தவிப்பதும் தகுமோ? முறைப்பதும் முறையோ?
ராயலுக்கு என்ன சொல்லணுமோ சொல்லுங்க! என்ன செய்யணுமோ செய்யுங்க!

தனிமையிலே ராமைக் காண முடியுமா?
லால்-பாக்கினிலே லவ்வு செய்யத் தெரியுமா? ஓஓஓ :-))


(பிற்சேர்க்கை:
பதிவில் அவையடக்கம் கருதிக் கீழ்க்கண்ட படத்தை முதலில் வெளியிட மயங்கினேன் சொல்லத் தயங்கினேன்!
ஆனா புலிப் பால் கறந்த சபரிமலை PIT நிபுணரு, சிங்கப் பாலையும் கறந்தே ஆகணும்-னு கனவுல அருள் வந்து ஆடுனாரா? அதான்...கீழ்க்கண்ட படம்...ஹே ராம்!

பாவம், எங்க ராயலு நல்லவரு! ரொம்பவே கும்மிறாதீங்க மக்கா! :-)))

அடுத்து எதிர்பாருங்கள்...."ராமின் ரூமு" - ராயலின் பேச்சிலர் அறை பற்றிய ஒரு வரலாற்றுப் புதினத் தொடர்!


(அட! பெங்களூர் சந்திப்பு - பதிவு இன்னும் போடலை! அதுக்குள்ளாற அடுத்துடுத்து சென்னைச் சந்திப்புகள்! இப்ப தான் பிக்காசாவுல படம் எல்லாம் போஸ்ட் ப்ரொடக்சன் பண்ணிக்கிட்டு இருந்தேனா! இந்தப் படத்தைப் பார்த்ததும் அப்படியே பத்திகிச்சி! :-) அதான் அடுத்த பதிவு போடுறத்துக்குள்ளாற...
ச்சும்மா ஒரு Fill in the Blank...I mean, Fill in the Blog...என்சாய் மாடி!)
Read more »

Thursday, April 03, 2008

வடபழனி சென்றேன்! ஜிராவிடம் தோற்றேன்!

அதாச்சும் சில பேருக்கு "வட"-ன்னு சொன்னாலே கோவம் பொத்துக்கிட்டு வரும்! ஆனா அதை மாற்றி அருள நினைத்தான் போலும் தமிழ்க் கடவுள் முருகப் பெருமான்!
"வட" பழனிக்கு வா-ன்னு உத்தரவு போட்டான்! வடபழனி சென்றேன்! ராகவனிடம் தோற்றேன்! :))
திருமலைக்குச் செல்லும் போதெல்லாம்..
திருவேங்கடமுடையானை ஒரு முறை பார்த்தால் மட்டும் என் ஏக்கம் தீராது! குறைஞ்சது ரெண்டு மூனு தரிசனம்; அப்பத் தான் ஏக்கம் ஓரளவுக்காச்சும் தீரும்!
அது போல என் இனிய நண்பன் ராகவனை இந்த முறை சென்னையில் நாலைஞ்சு முறை தரிசனம் பண்ணியாச்! :-)

போதும் போதும் என்று ஓதும் வரை,
காதும் காதும் வைத்தாற் போலே,
தீதும் தீதும் தீர்ந்தே போக,
சேர்தும் சேர்தும் என்று அடியேனைச்
சேயோன் சேவடியில் சேர்த்திட்டான் ஜிரா!

வடபழனி போகலாம் வாரீங்களா,
அம்மா அப்பாவும் கூட வாராங்க-ன்னு ஜிரா கேட்க,
ஜீரா பேச்சை மீறா வண்ணம், தீரா நின்றேன்!

டின்னர் வித் பாவனா என்றால் எந்தப் பதிவன் மறுப்பான்?
முருகன் வித் ஜிரா என்றால் எந்தக் கேஆரெஸ் மறுப்பான்?
பஞ்சாமிர்த சுவையானைச் சுவைக்க ஓடினேன் வடபழனி!
வாயிலோ திருப்புகழ் தென்பழனி!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்!
முதலில் ஜிரா பெற்றோர் தரிசனம்! அவர்களின் அன்புக் கரிசனம்!

அதன் பின்னர் கரிசனத் தலைவன் கரிமுகன் பிள்ளையாரப்பன் தரிசனம்! தலையில் குட்டிக் கொண்டேன்!
ரவிக்கு "வைணவ மாயை" நீக்கி நல்ல புத்தி கொடுப்பா-ன்னு வேண்டிக்கிட்டு ஜிரா நடையைக் கட்டினாரு! தொடையைத் தட்டினாரு! :-)

ஆலய வரிசைக்குள் நுழையும் முன்னர் ஒரு சிறு நெருடல்! (சிறப்புத் தரிசன வழி...பிறகு சொல்கிறேன்)!
ஆனால் அது பட்டென்று மறைந்து உடனே அன்பின் வருடல்! உள்ளம் திருடல்!

என்ன தான் எந்தை-திருமால், அப்பாவின் பொண்ணு-ன்னாலும், அப்பா திருமால் பெருமையே பேசிக்கிட்டாலும்,
முன்னாலே அத்தான் முருகன் நிக்கும் போது என்ன நடக்கும்???:)
பிறந்த மேனியாய் நிற்கும் உலக ஆணழகனைக் கண்டால்???:))
ஆமாம்!
அந்த முருகு ஆண், பிறந்த திருமேனியாய், திறந்த கோலத்தில்,
ஒற்றைக் கோவணம், ஒய்யார இடுப்பு,
அதில் ஓங்கிக் கை வைத்து,
கள்ளச் சிரிப்பழகாய்ப் பழிப்பழகு காட்டி...

என் பெம்மான் என் முன்னே!
= "வெவ்வவ் வெவ்வே"

அவனைப் பார்த்தவுடன் கும்பிட மாட்டேன்; இதான் எனக்கு வரும்:)
இதை மோப்பம் பிடித்து விட்ட ஜிரா..
என்னைப் பார்த்து, "ஏய், வக்கணம் காட்டுறதை முதலில் நிறுத்து"-ன்னாரு:)


உச்சி கால வேளை அல்லவா? திருமுழுக்கு (அபிஷேகம்) நடைபெறப் போகுது போல! அதான் அத்தனை உடையும் களைந்துள்ளான்!

இன்று பார்த்து எங்களுக்காகவே கூட்டமும் அதிகம் இல்லை! ஒண்டியாய்க் கண்டோம் ஆண்டியை!

விண்மீன் வாரத்தில் "திருமாலும் தமிழ்க் கடவுளே" என்று அடியேன் இட்ட பதிவுக்கு, 
மற்ற பதிவர்களைப் போலவே ஒண்டிக்கு ஒண்டி ஆட நினைத்தானோ என்னவோ அந்த ஆண்டி? :-)

ராகவனார், அன்பராயும் வன்பராயும் மாறி மாறி மாறினாரு! 
பதிவுச் சீண்டலைச் செல்லமாய்ச் சீண்டியபடி வந்தாரு! அதனால் எனக்குச் சற்றே தயக்கம்! மெல்ல மெல்லத் தான் கால் பதித்தேன்!

கந்தனைக் கண்ட மாத்திரத்தில், எப்போதும் எனக்கு முருகாஆஆஆ என்று வாயும் மூச்சும் சேர்ந்தே முணுமுணுக்கும்! 
அந்த முணுமுணுப்பைக் கண்டான். முறுவல் பூ பூத்தான்!
வாடும் என் முகம் கண்டு, 
"வாடா" என்றழைத்தான் 
அந்த வாடாப் பழனியான்! வட பழனியான்!
அவ்வளவு தான்! இனி என்ன தயக்கம்? கன்றினுக்குச் சேதா கனிந்திரங்கல் போலே, உடனே ஒட்டிக் கொண்டேன் அவனிடம்!

எனக்கு முன்னால் இருந்தவர் சற்று உயரம் போல! 
(ஜிரா அல்ல! ஜிரா என்னைய விடக் குள்ளக் கத்திரிக்கா:-)))) 
மேலும் ஜிரா நண்பர் ஆகையால் எனக்கு மிக நெருக்கமாக நின்றார்)

முன்னிருந்த பக்தரின் உயரத்தால் அவனின் திருவுருவை, பாதாதி கேசம், முழுசாய்க் காண முடியவில்லை!
* எக்கி எக்கி நின்றேன்!
= "என்ன ஆணவம்? முருகனை விட நீ உயரம் காட்டுகிறாயா ரவி?" என்றார் ஜிரா!
* சொக்கிச் சொக்கி நின்றேன்!
= "சொக்கன் மகனைச் சொந்தம் கொண்டாடிக்கப் பாக்குறியா கேஆரெஸ்?" என்றார் ஜிரா!

ஜிராவைப் பார்த்து நான் சிரிக்க, அவர் என்னைப் பார்த்துச் சிரிக்க, செங்கோடன் எங்கள் இருவரையும் பார்த்துச் சிரியோ சிரியெனச் சிரித்தான்! 
இந்தச் சிரிப்பலையில் பிரிப்பலை சிறிதும் இல்லை என்று உரைத்தான்!


அர்ச்சகர் திருக்குடம் (பூர்ண கும்பம்) ஏந்தி வர..
தொடங்கியது திருமுழுக்கு!

எண்ணெய்க் காப்பு! உடனே தீப ஆராதனை! ஏனோ அவசரம் அவசரமாகச் செய்தார்கள்! ஆனால் அழகில் லயிக்கும் போது அழுக்கா தெரியும்? 
"எழுதுங்கால் கோல் காணாக் கண்ணே போல்" என்பதல்லவா ஐயன் வள்ளுவன் வாக்கு?

வடபழனி ஆண்டவர், பழனி மூலவர் போலவே அப்படி ஒரு அமைப்பு!
(நவபாஷாணம் மட்டும் தான் இல்லை)! 
வேல் கைகளில் இல்லை! தோளில் சார்த்தப்பட்டு இருக்கு! 
வலக்கையில் யோக தண்டம்! இடக்கையோ இடுப்படியில்!
* இடுப்போ அதி பயங்கர வளைவு = அத்தனை கவர்ச்சி நடிகைகளும் பிச்சை வாங்க வேண்டும் இந்த ஆண்டியின் இடுப்பு பெற!
* திண் புயத்து மார்பு = அத்தனை ஆர்க்குட் நடிகர்களும் பிச்சை வாங்க வேண்டும் இந்த மாரனின் மார்பு பெற!

அய்யன் முருகன் பேசினான்:
"இதே போல் எக்கி எக்கிப் பார்த்து தானே பதிவிலும் உண்மையை உரைத்தாய்! தான் தோன்றித் தனமாய் நீ ஏதும் சொல்லவில்லையே!
தொல்காப்பியம் தமிழின் நல்காப்பியம் அல்லவா? அதிலிருந்து சொன்ன உனக்கு இப்போ சன்னிதியில் மட்டும் வீண் தயக்கம் ஏன்?

எனக்கு மலை என்றால், மாமனுக்குக் காடு! = காடில்லாமல் ஒரு மலையுண்டோ? 
மலை இறங்கி வந்தல்லவா மாமனிடம் பெண் கேட்டேன்! தாய் மாமன் = தாயும் மாமனும் ஒன்றாய் அமைந்த இது தோழமை உறவல்லவா? "


எண்ணெய்க் காப்பு முடிந்த உடனே சந்தன முழுக்கு! 
நெற்றிக்குப் பொட்டிட்டு..
நேத்ரானந்த தீப சேவை (கண்ணழகுச் சுடரொளிச் சேவை)! 
மந்திர உபாசனை!
"முல்லையின் மணம் குறிஞ்சியில் வீசக்கூடாதுன்னு யார் தடை போட முடியும்? முல்லையின் ஆயர்கள் கறந்த பால் அல்லவா எனக்குத் திருமுழுக்கு! அந்த அன்-பால் முழுகுகின்றவன் தானே நான்?

எங்கள் உறவுக்கு வட கதை இல்லை! 
ஆனால் தமிழ் விதை உண்டு தானே ரவி?

வடபுலத்தில் எங்கள் உறவு தெரியவில்லை! 
அதனால் இங்கவர்க்கும் எங்கள் உறவு புரியவில்லை! 
ஆனால் இயற்கை வழிபாடு அதுவல்லவே!
* காடும் மலையும் தமிழ் நிலங்கள்!
* நானும் மாலும் தமிழ் இறைகள்!

அதைத் தானே சொன்னாய்? 
தயங்காமல் சொன்ன உனக்குத் தருவேன் நூறு முத்தம்" 
-என்று முத்தைத் தரு பத்தித் திரு நகையால் என் முருகன் புன்னகை பூத்தான்!

களைந்து பஞ்சாமிர்த முழுக்கு! 
தேனுடம்பில் தேன் வழிந்து ஓடியதே! 
பொட்டிட்டு இந்த முறை..
புஜங்க தீப சேவை (தோளழகுச் சுடரொளிச் சேவை)!


மற்றவர் என் பிளாக்கர் பதிவை மட்டுமே கண்டார்! உற்றவன் என் உள்ளப் பதிவைக் கண்டான்!
மற்றவர் கோள் கண்டார் கோளே கண்டார்! நண்பர்கள் தோள் கண்டோம் தோளே கண்டோம்!

தங்கள் ஆயுதங்களுக்கு முதலில் நெய் பூசி விட்டு, பின்னரே தமக்கு எண்ணெய் பூசிக் கொள்வது மறவர் வழக்கம்!
அதே போல், வேலுக்கு தான் முதலில் முழுக்காட்டப்படுகிறது! பின்பு தான் முருகனுக்கு!
திருமலையில் சக்கரப் படைக்கும் இவ்வாறே செய்து விட்டு, பின்னரே இறைவனுக்கு முழுக்காட்டுகிறார்கள்!

ஆவின் பால் முழுக்கு!
உடனே ஆவின் தயிர் முழுக்கு!
உடனே பன்னீர் முழுக்கு!

உடனே திரை!

நிமிடங்களில் அந்த அழகை மின்னலாய்த் தோன்றி மறைத்து விட்டார்களோ?


திரையிட்ட பின் என் நண்பனும் நானும் பேசிய சென்சார் பேச்சுகளை, அவரே வந்து சொல்லுவார்! :-)
திரை விலகல் ஆகாதா? தெர தீயக ராதா?
இதோ மத்தளம் கொட்ட வரிசங்கம் நின்றூத, திரை விலகியது! கரை விளங்கியது!
அடுக்கு தீபம் சுற்றிச் சுற்றி ஆடுகிறது!

சந்தனக் காப்பில் சரவணன் ஜொலிக்கிறான்!
ராஜ அலங்காரம்!
திருமுடி மாலை, தோள் மாலை, இடைமாலை சூடி நிற்கிறான் அழகன்!

கண் மை வரையப்பட்டுக், 
கன்னத்தில் கருஞ்சாந்துப் பொட்டிட்டுக்,
காலடிகள் சதங்கையிட்டு, 
தீபத் தட்டு திருமேனியெங்கும் சுழலச் சுழலக்....

கந்தனைக் காணாத கண் என்ன கண்ணே!
கண் இமைத்துக் காண்பார் தம் கண் என்ன கண்ணே!


"அரோகரா" என்ற கோஷம் அடியவர்கள் ஒலிக்க, 
ஓதுவா மூர்த்தி ஒரு ஓரத்தில் இருந்து...
"விழிக்குத் துணை திரு மென் மலர்ப் பாதங்கள்" என்று பாட...
ராகவனும் நானும் கரைந்தோம்! கந்தனில் உறைந்தோம்!

உட்பிரகாரம் வலம் வந்து, அபிஷேகத் தொட்டித் தீர்த்தம் எடுத்து ஜிராவின் கையில் கொடுத்தேன். 
வீரபாகு சந்நிதி கடந்து, நால்வரையும், அப்பன் சொக்கனையும், அன்னை மீனாட்சியையும் கண்டோம்!

உற்சவ மூர்த்தியின் கண்ணாடி அறையில் வள்ளி-தேவயானையுடன் சண்முகப் பெருமான் ஜொலிக்க, 
அங்கு (எனக்காகவே போலும்) முருகன் சன்னிதியில் தீர்த்தம் கூடத் தருகிறார்கள்! :-)

வெளி வலத்தில் சிறிய திருவடியான ஆஞ்சநேயர் முருகனைப் பார்த்தவாறு சந்நிதி கொண்டுள்ளார்! 
ஆனா ஜிரா வராததால், நானும் செல்லவில்லை:)
ஆனா "நைசா" மனத்தில் இருந்தே அவரைச் சேவித்தேன்!:) "மனசால போன தானே?" -ன்னு அதையும் துல்லியமாக் கண்டுபுடிச்சிக் கேட்டாரு தோழரு:))

வெளி வலத்தில் சித்தர் சன்னிதியும், அதை ஒட்டிய தியான மண்டபமும் உள்ளது.
சுமார் நூறு ஆண்டுக்கு முன்னால் அண்ணாசாமித் தம்பிரான், அவர் நண்பர் ரத்னசாமித் தம்பிரான் அவர்களின் முயற்சியாலும் அருள்வாக்காலும் வடபழனி ஆலயம் தோற்றம் பெற்றது.

ஆனால் முழுமை பெறும் முன்பே அவர்கள் மறைந்து விட..
வாரியார் சுவாமிகள் திருப்பணிகளை முன்னின்று முடித்து வைத்தார். இவர்களின் சன்னதியே இந்தச் சித்தர் சன்னிதி!

அருணகிரி சன்னிதியை ஒட்டி பிரசாதம் சுடச்சுடத் தரப்பட, அனைவரும் இலையில் உண்டு, அமைதியாகக் கிளம்பினோம்!
பின்னர் வடபழனி சரவண பவனில் எங்க எல்லாருக்கு மதிய உணவை ஜிரா வாங்கித் தந்தாரு!

கேசரி அவர் மட்டும் ஒரு பிளேட்டு எக்ஸ்ட்ரா சாப்பிட்டாரு! எனக்குத் தரவே இல்லை! :-)


புகைப்பட வைபவம் எல்லாம் முடிந்து,
சரவண பவ என்னும் திருவாறெழுத்தின் (சடாட்சரம்) பொருள் என்ன ராகவா? என்று கேட்டேன்!

மாதவச் சிரிப்பே பதிலாய் வந்தது! பாசமும் தந்தது!


விழிக்குத் துணை திருமென் மலர்ப் பாதங்கள்! - மெய்மை குன்றா
மொழிக்குத் துணை முருகா என்னும் நாமங்கள்! - முன்பு செய்த
பழிக்குத் துணை அவன் பன்னிரு தோளும், - பயந்த தனி
வழிக்குத் துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே
!
Read more »

பெங்களூரு! பதிவரு! சந்திப்பு! ஆன்மீகம் அல்ல! பெண்மீகம் பேச!

அட சத்தியமா நம்புங்க தல! நம்புங்க!
இந்த வாரயிறுதி பெங்களூர் வாரான் ஒருத்தன்! நிராயுதபாணியா வேற வாரான்! பெண்களூரில் பெண்மீகம் பேச! :-))
நல்ல சான்ஸ்! பல நாள் கணக்கைத் தீர்த்துக்கலாம்!
என்னா சொல்றீங்க? :-))

*இப்போதைக்கு நம்ம பிளாக் யூனியன் டிடி யக்கா தான் தலைமை தாங்குவேன்-ன்னு அடம் புடிக்கறாங்க! தலைமை தாங்குவாங்களா, தலையை வாங்குவாங்களா? கரீட்டாச் சொல்லுங்க பார்ப்போம்!
*பெங்களூரம்பதி ச்ச்ச்சே மதுரையம்பதி அண்ணா தான் சந்திப்பு சாக்ரடீஸ்!
*ராயல் ராம் மீல்ஸூக்கு பிரம்ம கூழு ஊத்தறேன்னு வாக்கு கொடுத்துருக்காரு!

*நம்ம ஜீவ்ஸ் அண்ணாச்சி, அத்தினி பேரையும் பொகைப்படத்துல புகை போடறதா சொல்லி இருக்காரு!
*அம்பி, கணேசன் வில் வித்தைப் போட்டி, நிகழ்ச்சியின் ஸ்பெசல்
*வேதாக்கா மீட்டிங்கை வேதா-ளத்தில் இல்லீன்னா பாதாளத்தில் வச்சிக்கலாம்-னு சொல்லி இருக்காக

*நம்ம கவிதாயினி ஷைலஜா அவர்களின் நான் ஸ்டாப் இன்னிசைக் கச்சேரி தான் போனஸ்!

*சிவமுருகன் காளைக்கு ஒடம்பு சரியில்லைன்னு மயில் மேல் வரதா சொல்லி இருக்காரு!
*மோகன்தாஸ் "சித்திரம் பேசுதடி"-ன்னு பாட்டு வரையப் போறாராம்!
*தலைவர் தேசிகன் சென்னைப் பயணத்தைப் பொறுத்து அருள்வாக்கு கொடுப்பாரு!

***என்றும் போல் இன்றும், தி ஒன்லி தல ஆப் சங்கம், செவ்வாழைச் சித்தப்பு, நம்ம கைப்புள்ள, தேசிய கீதம் பாடி நிகழ்ச்சிய முடிச்சிப் போடுவாரு!

சிவப்பு பாக்கில் (லால் பாக்கில்), வெத்தலை (மொக்கை) போடலாம்னு இப்போதைக்குத் திட்டம்!
நாள்: சனிக்கிழமை ஏப்ரல்-5
நேரம்: மாலை 03:00
நட்சத்திரம்: அதைத் தமிழ்மணம் பாத்துக்குவாங்க!
பொருள்: (அட ஏதாச்சும் ஒரு கருப்பொருள் இல்லாம எப்படிப் பதிவெழுதறதாம்?) 2008-இல் திருமணம் ஆகும் பதிவர்கள்!

சரி,
பல பேரு என் லிஸ்ட்டில் விட்டுப் போச்சு!
பின்னூட்டத்தில் சொல்லி ஜோதியில் சேர்ந்தீங்கன்னா, கும்மி சந்திப்பிலும் களை கட்டும்!
வர்ட்டா :-)))
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP