Saturday, February 28, 2009

தமிழ்மணம் விருது பெற்ற காரைக்கால் அம்மையார்!

மக்களே! முதலில் நன்றி! - வாசகர்களுக்கும், சக பதிவர்களுக்கும், தமிழ்மணத்துக்கும்!
* ஆன்மீகம்-சுயதேடல் என்னும் பிரிவில் முதல் விருது தந்தமைக்கு!
** சமூக விமர்சனங்கள் என்னும் பிரிவில் இரண்டாம் விருது தந்தமைக்கு!!


உடனே நன்றி சொல்லிப் பதிவு போட்டாக்கா, ரெண்டே வரியில் முடிஞ்சிருமே! அது பந்தலுக்கு அழகா? அப்படி ஒரு சுருக்கமான பதிவு, பந்தலில் வந்ததா சரித்திரமே கிடையாதே! கொறைஞ்சது ஒரு பக்கமாச்சும் நீள வேணமா? :)

தனி மடலிலும், தொலைபேசியும் வாழ்த்து சொன்ன அன்பர்கள் எல்லாருக்கும் நன்றி!
இன்னும் இரண்டு பதிவுகளை, முதல் ஐந்தில் வைத்தமைக்கும் கூடுதல் நன்றி!
இந்த விருதுகளைப் பெற்றுத் தந்த "அந்த" இரண்டு இடுகைகள்! - அதைப் பற்றிச் சில உண்மைகளை உங்களோட பேசணும்-ன்னு நினைச்சேன்! அதான் இரண்டு நாள் கழிச்சி.....மெள்ளமா.....இந்த நன்றிப் பதிவு!

சரி, இந்த இரண்டு விருதுகளையும் யாருக்குக் காணிக்கை ஆக்கலாம்?
* ஈழத்தில் பிறந்த ஒரே காரணத்துக்காக, ஈழத்தின் போர் முனையில் சிக்கித் தவிக்கும் பிஞ்சுக் குழந்தைகளுக்கும்,
** இன்னும் புலம் பெயராது, எதிர்காலம் என்றால் என்னவென்றே தெரியாது இருக்கும் ஈழத்து இளைஞர்களுக்கும் இதைக் காணிக்கை ஆக்குகிறேன்!

தமிழ்மணம் விருதுகள் 2008! இதில் வென்றவர்க்கும், உடன் நின்றவர்க்கும் என் உளமார்ந்த வாழ்த்துக்கள்!
* நான்கு சதம் அடித்த டாக்டர் ப்ரூனோவுக்கும்
* என்னுடன் இரட்டைச் சதம் அடித்த தோழி. லிவிங் ஸ்மைல் வித்யாவுக்கும் சிறப்பு வாழ்த்துக்கள்!
உண்மைத் தமிழன் அண்ணாச்சி, ராயல் ராம் மற்றும் டுபுக்கு அண்ணன் அவர்களுக்கும் இனிய வாழ்த்துக்கள்!

இப்போ மேட்டருக்கு வருவோம்!


*** ஆன்மீகம் பிரிவில் முதல் விருதைப் பெற்ற காரைக்கால் அம்மையார் பதிவு, பல எதிர்ப் பதிவுகளைச் சம்பாதித்துக் கொண்ட பதிவு!

பெரியவர்கள் கீதாம்மா, திவா சார், ஓகை ஐயா போன்ற சில மூத்தோர்களின் எதிர்ப்பையும், ஆன்மீகப் பதிவர்கள் வேறு சிலரின் கோபத்தையும் பெற்றுக் கொண்ட ஒரு "துரதிருஷ்டப்" பதிவு-ன்னே கூட அதைச் சொல்லலாம்! :(

*** சமூகம் பிரிவில் இரண்டாவது விருதைப் பெற்ற கோயில் உண்டியல் பதிவும், பல எதிர்ப் பதிவுகளைச் சம்பாதித்துக் கொண்ட பதிவு தான்! :)

ஆனால் இங்கு சுவாரஸ்யம்! வவ்வால் போன்ற நுட்பமான வாசக அறிஞர்கள், மற்றும் அன்புடன் பாலா போன்ற நண்பர்கள், எதிர்ப் பதிவுகள் போட்ட சுவையான பதிவுச் சங்கிலிகள்! :)

இதில் இருந்து மாரல் ஆஃப் தி ஸ்டோரி ஏதாச்சும் உங்களுக்குப் புரியுதா மக்களே? = விருது வாங்கணும்-ன்னா மொதல்ல எதிர்ப் பதிவு வாங்கோணும்! :))



காரைக்கால் அம்மையார் பற்றிய பதிவு - ஞாபகம் இருக்கும்-ன்னு நினைக்கிறேன்! :)
இதோ: தேவாரம் பாடிய “ஒரே” பெண் - Icon Poetry!

இனி, உங்களிடம் மனம் விட்டுப் பேச நினைத்த சில உண்மைகள்!

பதிவின் மையக் கருத்து: பல துறைகளைப் போல ஆன்மிகமும் ஒரு துறை தான்! மற்றது புறத் துறை-ன்னா, ஆன்மீகம் அகத் துறை!
பிற துறைகளைப் போலவே, இதிலும் பெண்கள் வெகு "இயல்பாக" இருக்க முடியும்! அவர்களின் "பெண் தன்மை", அருள் தன்மையால் பாதிக்கப்படவே படாது! - இவ்ளோ தான் மையக் கருத்து!

வெள்ளைக்காரர்கள் D.H.Lawrence முதலானோர் "கண்டுபிடித்த" Icon Poetry என்னும் குறியீட்டுக் கவிதையை,
ஆயிரம் ஆண்டுகளுக்கும் முன்பே செய்து காட்டிய "ஒரே ஆன்மீகப் பதிவர்-பெண் பதிவர்" = கவிஞர். புனிதவதி என்னும் பேதைப் பெண்!
பின்னாளில் காரைக்கால் அம்மையார் என்னும் நாயன்மார்-சாதனையாளர் ஆனார்!

இது போன்ற குறியீட்டுச் சிந்தனை, அப்போது எந்த ஒரு ஆன்மீகத் தலைவருக்கோ, இலக்கியக் கவிஞருக்கோ, மன்னருக்கோ கூட வரவில்லை!
இவளுக்கு மட்டுமே வந்தது!
ஆனால் புனிதவதி அதற்காக கொடுத்த விலை மிக மிகப் பெரிது!


சந்தோஷமான குடும்ப வாழ்க்கையைப் பறி கொடுத்ததோடு மட்டுமில்லாமல், "பெண் தன்மை" வாழ்க்கையையும் சேர்த்தே பறி கொடுத்து விட்டு, பேய்-மகளிர் என்று மாறினாள்!
அகோரி, ஆர்யா என்றெல்லாம் இன்னிக்கி "நான் கடவுள்" படத்தில் பேசுகிறோமே...இருபத்தியோரு வயசுப் பெண், சுடுகாட்டில் வாழ்வதை, சும்மா கற்பனை பண்ணிப் பாருங்கள்!

அவள் கணவன் மேல் வைத்த முழுமையான பேதை அன்பு, "ஆன்மீகம்" என்ற பெயரால் தூக்கி எறியப்பட்டது!
கணவன் அவள் பக்தியைப் "போற்றுவதாக"ச் சொல்லிக் கொண்டு, ஆனால் யாருக்கும் தெரியாமல் அகன்று கொண்டான்!
ஆள் வைத்துத் தேடிய போது, இன்னொருத்தியை மணம் முடித்துக் கூட்டி வந்தான்! ஊரும் அவன் செய்தது சரியே என்றது!
கணவனைப் பிரிந்த நிலையில், அவளுக்கு எந்த உதவியும் யாரும் செய்து தரவில்லை, கணவன் உட்பட! சுடுகாட்டில் வாய்க்கரிசி பொறுக்கித் தின்று, கடைசியில் (சிவபெருமான் அருளால்?) பேய் மகளிர் ஆனாள்! :(



இன்றும் காரைக்கால் மாங்கனி விழாவில், அம்மையாருக்கு விழா எடுப்பதாகச் சொல்லி, சைவக் கொழுந்தான பரமதத்தன் என்னும் அந்தக் கணவனாருக்கு பல்லக்கு எடுத்து, கடற்கரை விழா எல்லாம் நடத்துகிறார்கள்!
இந்தக் காலத்திலும் இது தேவையா என்ற ஒரு கேள்வியும் பதிவில் கூடவே வைத்திருந்தேன்! அதுவும் சேர்ந்து குப்பென்று பிடித்துக் கொண்டது! :)

வழக்கமான ஆயுதங்கள்:
* சைவத்தைத் தாழ்த்துகிறாய், வைணவத்தை ஏற்றுகிறாய்!
* சமூக விடயங்களை ஆன்மீகத்தில் கலக்குகிறாய்!
* லோக்கலாக, ஜனரஞ்சகமாக எழுதிப் புனிதத் தன்மையைக் குறைக்கின்றாய்! - என்பது வழக்கம் தான்! :))

ஆனால் இப்போது புதிதாகச் சில ஆயுதங்களும் சேர்ந்து கொண்டன:
* நீலிக் கண்ணீர் வடிக்கிறாய்!
* அடியவர்கள் கதையைச் சினிமாத்தனமாக எழுதலாமா?
* போலியான தன்னடக்கம்! 'தத்தா நமர்'-இல் வருவது போல், சிவனடியார் வேடம் போட்டுக் கொண்டு பொய்யான தெளிவு! - இப்படியும் சில கணைகள்! :))))

ஆனால் அத்தனையும் மீறி, அடியேனைத் தனிப்பட்ட முறையில் பாதித்த பதிவு-ன்னா.......இது வரை..... இந்த ஒரு பதிவு மட்டும் தான்!
//அவளை" ஏய், இங்கே வாடி" என்று கூப்பிட முடியாது என்ற அவனின் உண்மையான பயமும், தயக்கமுமே காரணம்// என்று பரமதத்தனுக்காக நம் நண்பர்கள் வலிந்து வலிந்து வாதிட்டதும் என்னை மிகவும் பாதித்தது!

இரண்டாம் பரிசு பெற்ற கோயில் உண்டியல் பதிவு கூட, வெறும் ஆலயச் சீர்திருத்தம் தான்! தம்பி வெட்டி பாலாஜி கூட, இது பற்றிப் பல முறை என்னிடம் தொலைபேசிக் காரசாரமா விவாதித்து இருக்கான்(ர்)! ஆலயத்து தன்னாட்சி நிர்வாகம் பற்றிய மாற்றுக் கருத்துக்களை எனக்கு நல்ல முறையில் எடுத்துக் காட்டி இருக்கான்(ர்)!
வவ்வால், செந்தழல் ரவி, அன்புடன் பாலா போன்றவர்களும் அவரவர் பார்வையாகத் தனித் தனிப் பதிவில் அருமையாகப் பேசி உள்ளனர்!

ஆனால், அவை எல்லாம் வெறும் புறச்சீர்-திருத்தம் தான்! காரைக்கால் அம்மையோ அகச்சீர்-திருத்தம்!

பல எதிர்ப் பதிவுகள் சம்பாதித்துக் கொண்ட அதே பதிவிற்கு, முதல் விருது என்னும் போது...
அது புனிதவதிக்குத் தரப்பட்ட விருது என்றே அடியேன் எடுத்துக் கொள்கிறேன்!


* அந்தக் காலத்தில் தான், ஊர் மொத்தமும் அவன் செய்தது சரியே, அவளுக்கு வேறு வழியில்லை என்றது!
* இன்றாவது, ஊர் மொத்தமும் புனிதவதி என்னும் காரைக்கால் அம்மை நாயன்மாருக்கு இரங்கியதாகவே எடுத்துக் கொள்கிறேன்!

புனிதா,
உன்னை சட்ட திட்டங்களுக்குள் அடக்காமல், வெறுமனே புனித ஆகம அந்தஸ்துக்குள் அடக்காமல்...
உன் உள்ளத்து உணர்ச்சிகளை, ஆன்மீக நியாயங்களை...
அன்று சிவபிரான் புரிந்து கொண்டான்! இன்று இதோ ஊரும் புரிந்து கொள்கிறது!
உன் உள்ளத்தை, இன்று இந்த ஊரும் "பாவிக்கிறது"! - "பாவனை" அதனைக் கூடில், "அவனையும்" கூடலாமே!

புனிதா, உனக்கான விருதை நீயே வந்து பெற்றுக் கொள்!
"அடியார்கள்" வாழ, அரங்க (தில்லை) நகர் வாழ...இன்னுமொரு நூற்றாண்டு இரு!


நண்பர்களே,
மனம் விட்டு சில சொற்களையும் உங்களிடம் இப்போது சொல்லிக் கொள்கிறேன்!

* இந்த மாதவிப் பந்தலில், இன்று போல் என்றும், ஆன்மீகம் அகத்து உணர்ச்சியாகவே "பாவிக்கப்படும்"!
* காய்தல் உவத்தல் இன்றி, உற்ற கருத்தோ-மற்ற கருத்தோ, எந்தக் கேள்வியும் கந்தக் கேள்வியாகவே "பாவிக்கப்படும்"!
* பாவிக்கும் போக்கு நல்லது! "பாவனை" அதனைக் கூடில், "அவனையும்" கூடலாமே!


* பதிவர் அல்லாத வாசகர்கள், சக பதிவர்கள், சக ஆன்மீகப் பதிவர்கள், என்னுடன் குழுப்பதிவு நண்பர்கள், பதிவுகளில் விவாதக் களம் கண்டவர்கள்...என்று அனைவருக்கும் இந்தச் சமயத்தில் அடியேன் நன்றி!
* நண்பர்கள், நண்பர் அல்லாதார், நண்பராய் இருந்து தற்சமயம் சினந்தார்கள், பிற்பாடு ஒரு வேளை சினம் தணிவார்கள்...அவர்களுக்கும் என் நன்றி! :)

இத்தனை பேரையும் சொல்லிட்டு, என் அன்புள்ள திருவேங்கடமுடையானைச் சொல்லலை-ன்னா எப்படி? உனக்கும் டேங்கீஸ்-ப்பா! :)

சக ஆன்மீகப் பதிவர்கள் ஒருவர் விடாது, அத்தனை பேருக்கும், இந்த இரண்டு விருதுகளையும் காணிக்கை ஆக்கி மகிழ்கிறேன்!

என்றும் வேண்டும் உங்கள் இன்ப அன்பு! அடியேனைச் சிறு வயதில் தூண்டிய அந்தப் பிரகலாதக் குழந்தை திருவடிகளே சரணம்!!!
Read more »

Sunday, February 22, 2009

சிவராத்திரி: சிவலிங்கப் பெருமாள்!

"என்னாது? சிவலிங்கப் பெருமாளா? என்னப்பா சொல்ல வர நீயி? சிவலிங்கத்தில் எப்படி பெருமாள் இருப்பாரு? என்ன தான் அரியும் சிவனும் ஒன்னு-ன்னு சொன்னாலும், சிவலிங்கம் என்பது ஈசனுக்கு மட்டுமே உரியதாச்சேப்பா! அதுல எப்படி....?"

"அட, சிவலிங்கம் என்றால் என்ன?-ன்னு முன்னமே சொல்லி இருக்கேனே, இந்தப் பதிவில்! அப்படியிருக்க, சிவலிங்கப் பெருமாள் என்பவர் இருக்க முடியாதா என்ன?"

"ஓ....புரியுது புரியுது! ஜிரா சொல்வது போல் கேஆரெஸ் மிக்ஸிங் டெக்னிக்! :)
* சிவலிங்கப் பெருமாள் = இராமேஸ்வரத்தில் சிவலிங்கத்தைப் பூசை பண்ணும் பெருமாள்-ன்னு சொல்ல வர, சரி தானே?
* சிவலிங்கப் பெருமாள் = திருவனந்தபுரத்தில் சிவலிங்கத்தைக் கையில் வைத்து துயிலும் பெருமாள்-ன்னு சொல்ல வர, சரி தானே?"

"இல்லையில்லை! இந்தப் பெருமாள் சிவலிங்கத்திலேயே இருக்காரு! அதனால் தான் சிவலிங்கப் பெருமாள்!"


"டேய்...உனக்கு இதே பொழைப்பாப் போச்சு! நல்ல நாள் அதுவுமா, மகா சிவராத்திரி அதுவுமா, இப்படிக் குழப்பி விட்டா எப்படி?"

"ஓ...இன்னிக்கி மகா சிவராத்திரி-ல்ல? எங்க ஊரு பக்கத்தில் இருக்கும் பழமை வாய்ந்த கோயிலில் தான் இந்தச் சிவலிங்கம் இருக்கு = சிவலிங்கப் பெருமாள்!"

"ஓ...ஒங்க ஊரு கோயிலா? அப்படின்னா இது உன் வேலையாத் தான் இருக்கும்! நான் நம்ப மாட்டேன்!" :)

"அடிங்க! முழுக்கக் கேளு! இந்த ஆலயத்தை அப்பர் சுவாமிகள் பாடி இருக்காரு! அருணகிரியும் பாடி இருக்காரு! இதை எழுதணும்-ன்னு ரொம்ப நாளா நினைச்சேன்! ஆனா இன்று சிவராத்திரி நன்னாள் அதுவுமா இந்தப் பதிவைச் சொல்லணும்-ன்னு இருக்கு போல!
இது கேஆரெஸ் மிக்ஸிங் டெக்னிக்கும் இல்லை! அப்பர்-அருணகிரி மிக்ஸிங் டெக்னிக்கும் இல்லை! அந்த ஈசனே வந்து மிக்ஸ் ஆன டெக்னிக்! பார்க்கலாமா? :))


காஞ்சிபுரம் டு வேலூர் போகிற வழியில் காவேரிப்பாக்கம்-ன்னு ஒரு ஊர் வரும்! எங்கூரு வாழைப்பந்தலுக்கு, காஞ்சிபுரம் டு ஆரணி வழியாகப் போகும் போது இந்த ஊரு வரும்!
காஞ்சிபுரத்தில் இருந்து சுமார் 20 கி.மீ தூரம் தான்! அங்கே தான் இருக்கு இந்த சிவலிங்கப் பெருமாள் அதிசயம்!

ஊரின் பெயர் = திருப்பாற்கடல்! கரபுரம் என்றும் சொல்வார்கள்!
முந்தைய காலங்களில் இந்த இடம் முழுக்க சிவாலயங்கள் தான்! மருந்துக்குக் கூட பெருமாள் கோயில்கள் இருக்காது! எங்க ஊராச்சே! அதான் சைவ சாம்ராஜ்ஜியம்! :)

புண்டரீக மகரிஷி என்பவர் யாத்திரை கிளம்பி, ஒவ்வொரு ஊராக வருகிறார்!
காஞ்சி வரதனைச் சேவித்த பின்னர் அப்படியே தன் யாத்திரையைத் தொடர்ந்து இந்தப் பகுதிக்கும் வருகிறார்! ஒவ்வொரு நாளும் பெருமாள் கோயிலில் தரிசனம் முடித்த பின்னர் தான், அவருக்குப் பகல் வேளை உணவு! அதுவே அவர் வழக்கம்!

காவேரிப்பாக்கம்-திருப்பாற்கடல் கோயில்

அன்றோ பெரும் பசி! ஆனால் பெருமாள் கோயில் மட்டும் கண்ணுக்கு அகப்படவே இல்லை! எங்கு திரும்பினாலும் சிவாலயம் தான்! அது சரி, சிவாலயத்தில் பெருமாளைக் காண முடியாதா என்ன?
லிங்கத்தின் மத்திய பாகம் பெருமாள் ஆயிற்றே! அதற்கு மேலே தானே ஆவுடையாரும்-லிங்கமும் இருக்கின்றன! அப்படியும் காணலாமே!

அம்பலவாணரின் இடப் பாகம் பெருமாள் ஆயிற்றே!
* பிறை தங்கு சடையானை வலத்தே வைத்து என்று ஆழ்வார்கள் பாடி இருக்கிறார்களே!
* இடம் மால், வலம் தான், இடப்பால் துழாய், வலப்பால் ஒண் கொன்றை
என்று நாயன்மார்கள் பாடி இருக்காங்களே!

பெருமாளைச் சேவித்து விட்டுத் தான் சாப்பிடுவேன் என்றால், சிவாலயத்துக்குள் சென்று அம்பலவாணரின் "இடப் பக்கம் மட்டும்" பார்த்து விட்டுச் சாப்பிட்டு இருக்கலாமே?
ஹிஹி! மகரிஷி அல்லவா? நியமம், ஆச்சாரம், சாஸ்திரம்-ன்னு ரூல்ஸை மட்டுமே பேசுவாரு போல! அதான் ஆழ்வார் நாயன்மார்களின் ஈர உள்ளம், அந்த ரூல்ஸூக்குத் தெரியாமல் போயிற்று! :)


சாத்திர விதிகள் பேசினாலும், அவனும் பக்தன் தானே? முனிவர் பசியால் வாடுவது கண்டு ஓடோடி வருகிறான் இடப்பக்கத்து இடையன்!

"என்ன முனிவரே? இப்படிக் களைச்சிப் போய் இருக்கீங்க? பசி வயிற்றைக் கிள்ளுதா?"

"ஆமாம் பெரியவரே! உங்களைப் பார்த்தாலே பழுத்த வைணவர் போல் இருக்கிறதே! இங்கே ஏதாச்சும் பெருமாள் கோயில் இருந்தால் சொல்லுங்களேன்! தரிசனம் முடித்துத் தான் சாப்பிட வேண்டும் என்பது அடியேன் நியம நிஷ்டை!"

"பெருமாள் கோயில்-ன்னா அது என்னிக்குமே காஞ்சிபுரம் தான் முனிவரே?
கோயில்=திருவரங்கம்! திருமலை=திருவேங்கடம்! பெருமாள் கோயில்=காஞ்சி! காஞ்சிபுரம் இங்கிருந்து பத்து கல் தூரமாச்சே! அது வரைக்கும் பசியோடு நடக்க முடியுமா உம்மால?
பசியால் காஞ்சிப் போயிருக்கும் நீர், காஞ்சி போகவும் முடியுமோ?"

"என் பசியை வைத்து வார்த்தை ஜாலம் செய்கிறீரா? நான் கேட்டது இங்கு ஏதாச்சும் பெருமாளின் கோயில் இருக்கிறதா என்று தான்!"

"ஓ...அப்படிக் கேட்டீரா? மன்னிக்கவும்! மன்னிக்கவும்! இப்படி இவ்வளவு பசியை வைத்துக் கொண்டு பெருமாள் கோயிலைத் தேடி அலைஞ்சி உயிரை விட்டால், அந்த அவப்பெயர் பெருமாளுக்கு அல்லவா வரும்! அதை யோசித்தீரா முனிவரே?"

"அதைப் பற்றியெல்லாம் எனக்குக் கவலை இல்லை! எனக்குச் சாஸ்திரமும் தான் முக்கியம்! சமயாச்சாரியார்கள் என்னும் ஏகாங்கிகள், ஆலயத்தில் காலா சாந்தி ஆகாது, உதர சாந்தி செய்யக் கூடாது என்பது சாஸ்திர விதி! முடிந்தால் கோயில் எங்கே என்று சொல்லுங்கள்! இல்லையென்றால் நான் என் வழியில் போய்க் கொள்கிறேன்!"

"ஆகா! பொறுமை! பொறுமை! அதோ இருக்கே...அந்த வெள்ளைக் கோபுரம்! அது பெருமாள் கோயில் தானே..."
பெரியவர் சொல்லி முடிக்கலை....மகரிஷி ஓடியே போகிறார்! பெருமாளைச் சேவிப்பதை விட, பசியின் வேகம் தான் அந்த ஓட்டத்தில் தெரிகிறது! :))
ஆனால் உள்ளே போன அதே வேகத்தில் திபுதிபு என்று வெளியே ஓடி வருகிறார் முனிவர்!

"அச்சோ! அச்சோ! அடேய்...அது சிவன் கோயில்! உள்ளே லிங்கம் இருக்கு! எதுக்கு என்னை இப்படி அலைக்கழிக்க விடுகிறாய்? உனக்குத் தெரியலை-ன்னா தெரியலை-ன்னு சொல்லி விடேன்!"

"இல்லை மகரிஷி! அது பெருமாள் கோயில் தான்! நேற்று வரைக்கும் அப்படித் தானே இருந்துச்சி! இன்னிக்கு மட்டும் திடீர்-ன்னு மாறிடுமா என்ன?
உங்களுக்குத் தான் பசியில் பார்வை மங்கிப் போச்சோ என்னவோ? ஞானக் கண் இருக்குறவங்களுக்கு எல்லாம் ஊனக் கண் வேலை செய்யாது போல! ஹா ஹா ஹா!"

"தினப்படி அக்னி ஹோத்ரம் செய்யும் என்னிடம் கேலி பேசுகிறாயா? இதோ பிடி சாபம்..."

"ஐயோ முனி சிரேஷ்டரே! மன்னிச்சிகோங்க! கேலி அல்ல! நிஜமாலுமே அது பெருமாள் கோயில் தான்! வாங்க, நான் கொண்டு போய் காட்டுகிறேன்!"


ஊர் மக்கள் எல்லாரும் இந்தச் சண்டையில் கூடி விட்டனர்! அத்தனை பேருக்கும் வியப்பு! அது சிவன் கோயில் தானே! யார் இந்த நாமக்காரப் பெரியவர்? இப்படி வல்லடி பண்றாரு! கூட்டிட்டுப் போய் வேற காட்டுறேன்-ன்னு இவ்வளவு உறுதியாச் சொல்றாரே!

மக்கள்: "மகரிஷி! இந்த ஊர் மக்கள் நாங்க! அது சிவன் கோயில் தான்! இந்தப் பெரியவர் யார்-ன்னே தெரியலை! ஊருக்குப் புது முகமா வேற இருக்காரு!
ஆனாலும் உங்களை விட வயதில் பெரியவர் என்பதால் அவர் சொல்வதைக் கேட்டுத் தான் பார்ப்போமே! உள்ளே போய் பார்க்கலாம் வாங்க!"

புண்டரீகர்: "பழுத்த வைஷ்ணவ தர்மம்! மறந்தும் புறம் தொழேன்! சாஸ்திரத்தில் சொல்லி இருக்கு! அதன்படி தான் நடப்பேன்! இம்மி கூட பிசக மாட்டேன்! என்னைச் சிவாலயத்துக்குள் கால் வைக்க எல்லாரும் சதி செய்கிறீர்களா என்ன?"

பெரியவர்: "உள்ளே வந்தால் தானே என்னால் அது பெருமாள் கோயில்-ன்னு நிரூபிக்க முடியும்? அநாவசியமாக என்னைப் பொய்யன் என்று குற்றம் சாட்டாதீர்கள்! அந்தப் பாவம் முனிவரே ஆனாலும் சும்மா விடாது! நிரூபிக்க எனக்கு வாய்ப்பு கொடுத்தே ஆக வேண்டும்!"

மக்கள்: "இதுவும் சரியாகத் தான் படுகிறது! ஒருவருக்கு நிரூபிக்கும் வாய்ப்பு கொடுப்பது தான் சட்டம், தர்மம் எல்லாம்! வழக்கைச் சீக்கிரம் முடிக்கலாம்! எல்லாரும் உள்ளே வாங்க!"

உள்ளே, கருவறையில்...
சிவலிங்க அடிப்பாகம்! வட்டமான ஆவுடையார்! ஆனால், ஆனால், மேலே, மேலே..... இது என்ன மாயம்? இது என்ன விந்தை?
வட்டமான ஆவுடையாரில் இருந்து, நீளமான உருவம் போல் ஒன்று எழுகிறதே!
பார்க்க சிவலிங்கம் போல் இருக்கு! ஆனால் இது சிவலிங்கம் இல்லையே!

ஆகா...சிறு கரங்களில், சிறு சங்கு-சக்கரம்! இது மேலே பெருமாளே தான்!
இல்லையில்லை! இது கீழே சிவலிங்கமே தான்!
இல்லையில்லை! இது சிவலிங்கப் பெருமாள்! சிவலிங்கப் பெருமாள்!

சிவலிங்கத்தில் இருந்து எழும் பெருமாளுக்கு, திருவேங்கடமுடையானாக அலங்காரம்!


நேற்று வரை சிவலிங்கமாக அல்லவா இதைப் பார்த்தோம்? இன்று எப்படி இப்படி ஒரு நுணுக்கமான மாற்றம்? கூர்ந்து பார்த்தால் அல்லவா தெரிகிறது! - ஊர் மக்கள் வியக்க, லிங்கத்தின் ஆவுடையாருக்கு மேலே பெருமாளின் உருவமாய் நின்று கொண்டிருந்தான் இறைவன்!

இது வரை இப்படி ஒரு பெருமாளை எந்தக் கோயிலிலும் பார்த்ததில்லையே என்ற வியப்பில் ஆழ்ந்தார் புண்டரீக மகரிஷி! ச்சே...வயதான பெரியவரைக் கோபித்துக் கொண்டோமே என்று திரும்பினால், ஆளைக் காணோம்! பசியாற்ற வந்தாயோ பரந்தாமா?
வயிற்றுப் பசியை விட, மனதின் பேதப் பசியை ஆற்றத் தான் இப்படி வம்புகள் செய்தாயோ? முனிவருக்கு நியமம், ஆச்சாரம் என்றால் என்ன இப்போது தான் புரிய ஆரம்பித்தது!

* தரிசனம் முடிஞ்சி சாப்பிடணுமே என்ற எண்ணத்தோடேயே தரிசனம் செய்வதா ஆச்சாரம்? எம்பெருமானின் மனசை வாடப் பண்ணக் கூடாதே என்பது தானே ஆச்சாரம்!
* நமக்குப் பாவம் வந்தாலும் சரி, அவன் பேருக்குக் களங்கம் வரலாகாது என்பது தானே ஆச்சாரம்!
* கோபிகைகள் தங்கள் காலடி மண்ணை, கண்ணன் தலைக்குத் துணிந்து கொடுத்து அனுப்பினார்கள் அல்லவா! அந்தத் திருவுள்ள உகப்பு தானே ஆச்சாரம்! இதோ குமரனின் பதிவு!

இன்றும் திருப்பாற்கடல் என்னும் இந்தத் தலத்தில், சிவலிங்கப் பெருமாளான இவரைக் கண்ணாரக் காணலாம்! மேலே பெருமாளும், கீழே லிங்கமும் ஆன இந்தத் திருமேனி அரிதிலும் அரிது!
இதன் அருகிலேயே அரங்கநாதப் பெருமாளும், மார்க்கபந்து ஈஸ்வரரும் (கரபுரீஸ்வரர்) தனிக் கோயில்களும் கொண்டு உள்ளனர்!

ஆலய முகப்பு

அமைதியான கிராமச் சூழல் உள்ள கரபுரம் என்னும் திருப்பாற்கடல்!
கண்ணார் நுதலார் "கரபுரமும்", காபாலியார் அவர்தம் காப்புக்களே - என்பது அப்பரின் காப்புத் தேவாரம் - ஆறாம் திருமுறை!
அப்பரின் தேவாரப் பாடல் பெற்று, இனிமையாக விளங்கும் சிவலிங்கப் பிரசன்ன வேங்கடேசப் பெருமாள் ஆலயத்தை, சிவராத்திரி அதுவுமாய் இந்தப் பதிவிலேயே கண்டு களியுங்கள்!

சிவராத்திரி அன்று ஈழத்தின் நிம்மதிக்கு, இந்த இரவில் தனியாக வேண்டிக் கொள்ளுங்கள்!



இப்படி சிவலிங்கத்தின் மேல்பாகம் பெருமாள் ஆனது என்றால்...ரிவர்ஸில்,
மொத்த பெருமாள் உருவமும் சிவலிங்கம் ஆனது தனிக்கதை!
குற்றாலத்தில் இன்று நாம் காணும் குற்றாலநாதர் தான் அவர்!


அகத்தியர் குற்றாலச் சாரலில் இருந்த அழகிய நன்னகரப் பெருமாளைக் காண ஆசைப்பட்டார்! ஆனால் அங்குள்ள வைஷ்ணவ சாஸ்திர சிகாமணிகள் சிலர், அகத்தியரை உள்ளே விடக் கூட மறுத்தார்கள்! எதுக்காம்? அவர் உடம்பு முழுக்க விபூதி பூசி இருந்தார்! அதான் காரணம்! :) (இன்று சில கோயில்களில் இந்துக்களுக்கு மட்டுமே அனுமதி உண்டு-ன்னு போட்டிருக்காங்க-ல்ல? அது போல-ன்னு வச்சுக்குங்களேன்!)

அகத்தியர் பெரும் சித்தரும் தமிழ் முனிவரும் ஆயிற்றே! ஆனால் அவர்களுக்கோ அதெல்லாம் முக்கியமில்லை!
அடியார்கள் முக்கியமில்லை! ஆச்சாரமே முக்கியம்! புறச் சின்னங்களில் மட்டுமே ஆடும் இவர்களுக்குத் தக்க பாடத்தை உணர்த்துவது எப்படி?
அந்தத் தமிழ்க் கடவுள் மாலவனைக் காண, இந்தத் தமிழ்க் கடவுள் முருகனே அகத்தியருக்கு யோசனை சொன்னான்! அவன் தான் இலஞ்சி முருகன்!

இலஞ்சி என்பது குற்றாலத்துக்கு அருகில் உள்ள சிற்றூர்! அந்த முருகன் தான், அகத்தியரை வைணவச் சின்னங்கள் தரிக்கும் படிச் செய்தான்! அவரும் மால்மருகன் சொன்னவாறே புறச் சின்னங்கள் தரித்து விட்டார்! வைணவக் காப்பில் ஆளே மாறிப் போயிருந்தார்!
இவர்களும் ஏதோ வைஷ்ணவ மகரிஷியாக்கும்-ன்னு நினைச்சி மரியாதைகள் பல செய்து வழியை விட்டார்கள்! நேரே கருவறைக்குள் பூசிக்கச் சென்ற அகத்தியர், பெருமாளின் அழகில் மயங்கி நின்று விட்டார்! நன்னகரப் பெருமாள்! நின்ற திருக்கோலம்! ஆனால் முகத்திலோ வாட்டம்!

"அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ" என்று எப்போதும் அடியவர்களை முதலில் நிறுத்தும் பெருமாளிடம், அடியவர் செல்லத் தடை விதித்தால் வருத்தம் வாராதா? தாயிடம் ஓடி வரும் குழந்தையைத் தடுத்துப் பாருங்கள், என்ன நடக்க்கும் என்று தெரியும் அல்லவா? :)

"சிவனார் திருமணக் காட்சி காண தென்றிசை வந்த முனியே, இந்தத் திவ்ய மங்கள விக்ரகத்தைக் காணத் தானே அவ்வளவு ஆசை கொண்டீர்கள்? நம்மை மேலிருந்து கீழாக உமது கையால் குறுக்கி, சிவலிங்கம் போல் ஆக்கி விடுங்கள்! அப்போது என்ன செய்கிறார்கள் பார்க்கலாம்?" என்று கேட்டுக் கொண்டான் பெருமாள்!

அகத்தியருக்கோ கலக்கம்! யாரையோ அடக்கப் போய், ஆகம விதிகளுக்கு இது முரணாகப் போகுமோ என்ற சந்தேகம்! அதையும் இறைவனே தீர்த்து வைத்தான்!
"மகுடாகமம் என்ற ஒன்று உள்ளதே! அதை என் மருகன், இலஞ்சி முருகன் உமக்குச் உபதேசித்து இருப்பானே? அதன்படி இப்படி மாற்றி அமைக்கலாம் அல்லவா?" - அகத்தியருக்குத் தூக்கி வாரிப் போட்டது! "ஓ...இவர்கள் பேசி வைத்துக் கொண்டு விளையாடுகிறார்களோ?"


தன் கைகளால் பெருமாள் திருமேனியைத் தலையில் அழுத்தலானார். அழுத்தி அழுத்தி, குறுக்கிக் குறுக்கி, பெருமாளைச் சிவலிங்கம் ஆக்கி விட்டார்!
குறுக்கிக் குறுக்கி ஆனதால் குறு+ஆலம் = குற்றாலம் ஆனது! அடியாரின் பொருட்டு நன்னகரப் பெருமாள் குறுகிப் போனார்! குற்றாலநாதர் ஆனார்!

தமிழ் முனிவன் அகத்தியனுக்கு நேர்ந்த அவமானம், தமிழ்க் கடவுளான மாலவனுக்கே நேர்ந்த அவமானம் அல்லவா? குன்றம் ஏந்திக் குளிர்மழை காத்தவன், குறுகி விட்டான்! உருகி விட்டான்!
அடியார்களை இகழ்ந்தவர்கள் ஆண்டவனையே இழந்தார்கள்!

இன்றும் லிங்கத் திருமேனியில் கைத் தழும்புகளைக் காணலாம்!
தலையால் குறுக்கப் பெற்ற இறைவனின் வலி தீர, குற்றாலத்துப் பக்தர்கள் இன்றும் இறைவனின் முடியில் தைலம் தடவுகிறார்கள்! சுக்கு நீரை மருந்தாக்கி கஷாயம் என்னும் "குடினி நிவேதனம்" செய்கிறார்கள்!
நேரமாவதைக் கண்டு வைஷ்ணவ சிகாமணிகள் கதவைத் தட்ட, அகத்தியர் வெளியில் வந்தார்! கருவறையில் லிங்கத்தைக் கண்ட வைஷ்ணவ அந்தணர்களுக்கு ஆயிரம் இடிகள் தலையில் இறங்கியது!
அகத்தியர் மேல் மந்திரம் ஏவி விட்டு, கயிற்றால் கட்டப் பாய்ந்தார்கள்! ஆனால் வாதாபியைச் சீரணித்த தமிழ் முனிவர் இவர்களையா சீரணிக்க மாட்டார்? மந்திர ஏவல் பொய்யாகி விட, தங்களை மன்னிக்குமாறு அழுதனர்! ஆனானப்பட்ட அகத்தியரே ஆகமத்தை மீறலாமா? என்று கதறினர்!

அகத்தியர் அவர்களுக்கு இறைவன் திருவுள்ளத்தை எடுத்துச் சொல்லி, இவர் குற்றாலநாதர் என்றே அழைக்கப்படுவார் என்று சொல்லினார்! உடன் இருந்த திருமகளையும் பூமகளையும், குழல்வாய்மொழி அம்மையாகவும், பராசக்தி பீடமாகவும் ஆக்கினார்!
முன்பிருந்த நன்னகரப் பெருமாளுக்குப் பக்கத்திலேயே தனி ஆலயம் ஒன்றை உண்டாக்கிப் பெருமாளைக் கொண்டாடினார்!
இன்றும் குற்றாலநாதர் சன்னிதியில் வருட உற்சவத்தின் போது, ஈசனுக்குப் பெருமாளாகவும் அலங்காரம் செய்து உற்சவம் நடத்துகிறார்கள்!

முனியே நான்முகனே "முக்கண் அப்பா" என்று ஆழ்வார் பாடியபடி, இன்றும் பெருமாள் முக்கண் அப்பனாகக் குற்றாலத்தில் ஈஸ்வரனாகக் காட்சி கொடுக்கிறான்!


* சிவலிங்கத்தில் பெருமாள் தோன்றிய கதையும்
* பெருமாளில் சிவலிங்கம் தோன்றிய கதையும்
பார்த்தீர்கள் அல்லவா? அடியவர் நன்மைக்காக ஆண்டவனே தோற்றம் மாறுவான் - இந்தச் சிவராத்திரி நன்னாளில் இதை நினைவு கொள்வோம் மக்களே!
அடியவர்கள் அன்பின் முன்னிலையில் எந்த ஆச்சார விதிகளும் நில்லாது! பெருமானின் திருவுள்ள உகப்பே காலமெல்லாம் கடந்து நிற்கும்!

அடியவர்களைப் பேசும் இவ்வேளையில், நாயன்மார்கள் போற்றிப் பாடிய ஈழ மண்ணுக்கு நிம்மதி வருமா?
இந்தச் சிவன் இரவில், ஈழச் சீவனுக்கு நிம்மதி கேட்போம்!

சிவலிங்கப் பெருமாள் திருவடிகளே சரணம்!
இல்லக விளக்கது, இருள் கெடுப்பது! நல்லக விளக்கது, நமச் சிவாயவே!

திருச்சிற்றம்பலம்!
Read more »

Sunday, February 08, 2009

சிதம்பரம் நடராஜர் - இனி அரசு செய்ய வேண்டியது என்ன?

Update:(Mar-24,2009,10:30am)
* நந்தனார் மனு, தமிழக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர். கனிமொழி அவர்களிடத்தில் சேர்ப்பிக்கப்பட்டு, அவர்கள் வாயிலாக முதல்வரின் பார்வைக்குத் தரப்பட்டுள்ளது!

* Mar-21 அன்று, நாமக்கல் சிபி அண்ணா, இதை அலுவலகத்தில் சேர்ப்பித்தார்!

* இம்முயற்சியில் பெரிதும் உதவிய தமிழ் உலகம் குழுமம்-மணியம் ஐயா மற்றும் ஆல்பர்ட், நாக. இளங்கோவன் ஐயா, மதுமிதா அக்கா, அதிகாலை.காம் நவநீதன், அபி அப்பா மற்றும் அனைத்து ஆர்வலர்களுக்கும், தமிழ்மணத்துக்கும் நன்றி! ஒப்பமிட்டவர்க்கெல்லாம் ஓங்கிய நன்றி!

தேர்தல் காலமே ஆனாலும், செல்பவர் காதுக்கும், கருத்துக்கும் இது சென்று சேர்ந்து விட்டால்...
பிறகு சிறிது சிறிதாக உருப் பெறும்! தொடர்ந்து இதில் ஆர்வம் காட்டுவோம்!

திருநாளைப் போவார், நந்தனார் திருவடிகளே சரணம்! திருச்சிற்றம்பலம்!

......Previous updates and the post below:

தில்லையில் இப்போதே நந்தனார் சிலையை மீள்-நிறுவி வி்ட்டால்...
பின்னர் யாராலும் அதன் மீது மீண்டும் கை வைக்க முடியாது! - கண்டிப்பா ஒரு தயக்கம் இருக்கும்!

இதோ, தமிழக முதல்வரிடம் தரப் போகும் மனு!
http://www.petitiononline.com/Chid2009/petition.html

உங்கள் கையெழுத்தை இட்டு, நந்தனின் தலையெழுத்தை மாற்றுவீராக!
அடியேன்,
அம்பலவாணர் பேரால், மிக மிக நன்றி! திருச்சிற்றம்பலம்!


Update:(Feb-12,2009,12:15pm)
Tried a small pictorial representation.(Based on gopala krishna bharathi, u.ve.sa accounts and malarmannan’s article in thinnai)

"பழைய" நந்தனார் சிலை பற்றிய குறிப்புகள்:
1. ஆளுயரச் சிலை
2. கைகளில் கடப்பாரையோடு
3. கூப்பிய கரம்
4. தோளில் மண்வெட்டி
5. நின்ற திருக்கோலம்

* மீண்டும் வடிவமைக்க நேர்ந்தால் இந்தக் குறிப்பு சற்று உதவும்-ன்னு நினைக்கிறேன்!
* இருந்த இடம்: நிருத்த சபை நடராஜரைப் பார்த்தவாறு, தெற்குத் தூணில்! (நிருத்த சபை என்பது பொன்னம்பலத்துக்கு தெற்கே இருப்பது!)


தில்லையில் நந்தனாருக்கு
உங்கள் கையொப்பம்!


பல மாற்றுக் கருத்துடை அன்பர்களும் தங்கள் கையொப்பம் இட்டுள்ளது மிக்க மகிழ்ச்சி! நன்றி! நன்றி!!
இந்த நன்முயற்சியை மேலும் முனைப்பாக்க, எல்லாத் தரப்பினரும், தயங்காது யோசனை சொல்லுங்கள்!

* அன்று தில்லைக்குள் வர, நந்தனார் வரவேற்கப்பட்டரா? என்ற ஆய்வைத் தற்சமயம் விடுவோம்!
* இன்று தில்லைக்குள் வர, நந்தனாரை முழுமூச்சாய் வரவேற்போம்! பூரண பொற் குடம் எடுப்போம்!




பதிவு:

திருச்சிற்றம்பலம்! தில்லையம்பல நடராஜப் பெருமானின் காரியங்களை, "தான் வைத்ததே சட்டம்" என்று தனிப்பட்ட முறையில் நடத்திக் கொள்ளாமல், பொதுவில் நடத்த, நீதிமன்ற உத்தரவு ஆகியுள்ளது என்று அனைவரும் அறிவீர்கள்! (Feb-2, 2009)

அடியார்கள் முயற்சி கைக்கூட, இறைவன் திருவுள்ளம் சேர, இது வாராது வந்த வெற்றி! நெஞ்சுக்கு நீதி! முயற்சி திருவினை ஆக்கும்!
தெய்வத்தான் ஆகாது எனினும் முயற்சி தன்
மெய்வருத்தக் கூலி தரும்!
- என்று ஐயன் சொன்னது, மெய்யாலுமே அம்பலம் ஏறி உள்ளது! தில்லை அம்பலம் ஏறி உள்ளது!

குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயிற் குமிழ் சிரிப்பும்,
பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண்ணீறும்,
இனித்தம் உடைய எடுத்த பொற் பாதமும் காணப் பெற்றால்...
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே!!!


இவை வெறும் வரிகள் அல்ல! அம்பலவாணனை ஒவ்வொரு கோணத்தில் (angle) இருந்தும் பார்த்தவர்களுக்கு, இந்தக் குமிழ் சிரிப்பு கட்டாயம் தெரிந்திருக்கும்!
ஆண்களையும், பெண்களையும் ஒரு சேர ஈடழிக்க வல்ல குமிழ் சிரிப்பு! தீட்சிதர்கள் மொழியில் சொல்லணும்-ன்னா ஜகன் மோஹனாகாரம்!

இனி என்ன? அவ்வளவு தானா?
தீட்சிதர்களின் ஆதிக்கம் ஒடுங்கியதாலேயே, நல்ல விடயங்கள் எல்லாம் தானாய் நடந்து விடுமா என்ன? இனி என்ன செய்யணும் என்பதைக் கொஞ்சம் பார்க்கலாமா? இது தொடர்பாகச் செய்ய வேண்டிய சில ஆக்கங்கள் பற்றி, முன்பு இட்ட பதிவு இதோ!

மேற்சொன்ன பதிவைப் பிரதி எடுத்து, அப்போது இரு தரப்புக்கும், அஞ்சல் (தபாலில்) அனுப்பி இருந்தேன்! சென்ற அக்டோபர் மாதம், அம்மா-அப்பா மணிவிழாவுக்கு இந்தியா சென்றிருந்த போது, தில்லை செல்லும் வாய்ப்பும் கிட்டியது!
அப்போது மதிய வேளை! தீட்சிதர் ஒருவரிடம்/இருவரிடம் பதிவுலகக் கருத்துக்கள் பற்றி லேசாப் பேச்சு கொடுத்த போது, நான் தான் அப்படி தபால் அனுப்பிச்ச ஆளு-ன்னு தெரியாம, என் கிட்டயே, என்னைத் திட்டித் தீர்த்தார்! இப்ப நினைச்சாலும் சிரிப்பு சிரிப்பா வருது! :)

ஆனால் சென்ற விஷயம் அம்மா-அப்பா விழா என்பதால், நானும் எதுவுமே பதில் பேசவில்லை! "சமத்துப் பிள்ளையா" இருந்து விட்டேன்! கடைசியா முடிக்கும் போது, நான் தான் அந்த மாதவிப் பந்தல்-ன்னு சொன்னேன்! சொன்னது தான் தாமதம்....முகம் மாறியது! ஆனால் உடனே சுதாரித்துக் கொண்டு அவரும் சிரித்து விட்டார்! :))))

தாங்கள் வைத்ததே சட்டம்! 100% Obedience! மறுப்புரை, கருத்து விவாதங்கள் - இதில் எல்லாம் நம்பிக்கை இல்லாத ஜனநாயகவாதிகள் நம் தீட்சிதப் பெருமக்கள்!
கருத்துக்களைப் பேசக் கூடக் கூடாது, பேசினால் கோபித்துக் கொள்வோம் என்ற போக்குள்ளவர்களிடம், அரசும் தொழில் முறை ரீதியாகவே (Professionalism) நடந்து கொள்ளல் நலம்!



ஜூனியர் விகடன் செய்தி: (Feb-11-2009)
அறநிலையத் துறை அதிகாரிகள் புடை சூழ, விழுப்புரத்திலிருந்து அறநிலையத் துறை இணை ஆணையர் திருமகள், சிதம்பரத்துக்கு வந்துள்ளார்.
இதற்கிடையில் அதிகாரிகளில் சிலரிடம், தீட்சிதர்கள் எதிர்ப்பைக் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள். உடனே அதிரடிப்படை போலீஸாரும், வஜ்ரா மற்றும் தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டன.

இந்தப் பரபரப்பின் 'க்ளைமாக்ஸா'க இரவு ஒன்பது மணி அளவில் அதிகாரிகள் கோயிலுக்குள் நுழைந்தனர். அதேநேரம், நானூறுக்கும் மேற்பட்ட தீட்சிதர்கள் அதிகாரிகளை வழிமறித்தனர்.
அவர்களின் வழக்கறிஞர் சிவக்குமாரிடம் நீதிமன்றத் தீர்ப்பையும், அரசு உத்தரவையும் கொடுத்த இணை ஆணையர் திருமகள், "ஒழுங்கா வழிவிடுங்க..." என்றார்.
சில நிமிட வாக்குவாதத்துக்குப் பிறகு அரசிடம் கோயிலை ஒப்படைக்க தீட்சிதர்கள் சார்பாக சம்மதித்துக் கையெழுத்திட்டார் சிவக்குமார்.
உடனடியாக தில்லை காளியம்மன் கோயிலின் செயல் அலுவலர் கிருஷ்ணகுமாரையே நடராஜர் கோயிலுக்கும் செயல் அலுவலராக நியமித்து ஆணை பிறப்பித்தார் திருமகள். அன்றிரவே, கோயில் அலுவலகச் சுவர்களில், இந்தத் தகவல் போஸ்டர்களாக ஒட்டப்பட்டன.

மறுநாள் மூன்றாம் தேதி கோயிலுக்கு வந்த செயல் அலுவலர் கிருஷ்ணகுமார், கீழக் கோபுரம் அருகே இருந்த ஒரு இடத்தில் அலுவலகத்தை அமைத்து நிர்வாக வசதிக்காக பத்து தற்காலிகப் பணியாளர் களையும் நியமித்தார்.

இந்நிலையில் நம்மிடம் பேசிய தீட்சிதர்கள், "தலைமுறை தலைமுறையாகக் கோயிலை நம்பியே வாழ்ந்து வருகிறோம். அரசு இவ்வளவு வேகமாகச் செயல்படுவதைப் பார்த்தால், எங்களை கோயிலை விட்டே அப்புறப்படுத்தி விடுவார்களோ என பயமாக இருக்கிறது. நாங்கள் மேல் முறையீடு செய்யப் போகிறோம்.
அதன் தீர்ப்பு வரும் வரை, இப்படி தடாலடியான காரியங்கள் செய்வதை அரசு கொஞ்சம் மட்டுப்படுத்திக் கொள்ள வேண்டும்..." என்றனர்.
(பத்திக்கும் படத்துக்கும் நன்றி: ஜூனியர் விகடன்)


சரி...........விகடன் செய்தியைப் பார்த்ததில் இருந்து, நமக்கே இருக்கும் உள்ளுணர்வில் இருந்து, அடுத்த கட்டம் நன்றாகத் தெரிகிறது! = மேல் முறையீடு! உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் என்று இந்த வழக்கு மேலும் நீட்டிக்கும்! இடைக்காலத் தடை கேட்டுப் பெற்றால் கூட ஆச்சரியம் இல்லை!

அதனால் அரசு செய்ய வேண்டியது என்ன? உடனடியாகச் செய்ய வேண்டிய செயல்கள் என்ன?

1. ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை
2. நிர்வாகம் தொடர்பானவை

என்னென்னு கிடு கிடு-ன்னு பார்க்கலாமா? நீங்களும் விட்டுப் போனவற்றைச் சொல்லுங்கள்! தொகுத்து தமிழக அரசுக்கும், இணை ஆணையர் திருமகளுக்கும், மின்னஞ்சலில் கூட அனுப்பி வைக்கலாம்!


ஆன்மீக வளர்ச்சி தொடர்பானவை:

1. நந்தனார் என்னும் திருநாளைப் போவார் நாயனார் சிலையை உடனே தேடிக் கண்டு பிடிக்க வேண்டும்! நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு, அவர் திருவுருவச் சிலை முன்பு இருந்தது! அப்புறம் "மாயமானது"!
எங்கு இருந்ததோ, அங்கேயே நந்தனாரை நிறுவி, வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும்!
பழைய சிலை கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை! உடனேயே புதிய சிலை ஒன்றினைத் தக்க ஸ்தபதி செய்து கொடுப்பார்!
இதை ஒரு வாரத்துக்குள் தமிழக அரசு செய்து முடித்தால் மிகவும் நலம்! மிகவும் சுலபமான வேலை தான்! அதிக நேரமில்லை!

வருகிற Feb-23 மகா சிவராத்திரி! - அதற்குள் நந்தனார், நடராஜப் பெருமானைப் பார்த்தவாறு இருப்பது பெரும் சிறப்பு!

தமிழக ஆலயங்களின் வருவாய், தமிழக அரசுக்குப் பல வழிகளில் துணை செய்கிறது! எனவே இந்த நற்செயலை (சத் காரியத்தை), உடனே செய்து கொடுக்க,
* தமிழக அரசு நன்றிக் கடன் பட்டுள்ளது என்பதை மட்டும் இங்கே ஆணித்தரமாகச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
* முதல்வர் கலைஞர் இதைத் தன் தனிப்பட்ட பணியாக எடுத்துச் செய்து கொடுத்தால், தில்லைத் தெய்வத் தமிழில், அவர் பெயர் என்றென்றும் நிலைத்திருக்கும்!

நந்தனார் சிலை பற்றிய வரலாற்றுக் குறிப்புகள்: கோபால கிருஷ்ண பாரதியின் கீர்த்தனைகள், உ.வே.சா குறிப்புரைகள் மற்றும் அரசு அலுவலர்களின் கட்டுரைகள்!
இந்தத் திண்ணைக் கட்டுரையையும் அவசியம் வாசிக்கவும்!

2. திருக்கோயில் ஓதுவார்கள், இப்போது கீழிருந்து தேவாரப் பதிகங்களை ஓதுகிறார்கள்!
ஆறுகால பூசையின் போது, தீட்சிதர்கள் தங்கள் வழிபாடுகளை முடித்த பின்னர், மணி அடிப்பார்கள்! பின்னர் ஒரு ஓதுவார், தமிழ்ப் பதிகம் ஓத ஆரம்பிப்பார்!
ஆனால் கருவறைக்கு (சிற்றம்பலம்) வெளியே உள்ள பொன்னம்பல மேடையில் இருந்து அல்ல! அந்த மேடையின் படியிறங்கி, கீழே வளாகத்தில் ஒரு ஓரமாய் நின்று ஓதுவார்!

இனி அவரைப் பொன்னம்பல மேடையில் ஏறிப் பதிகம் பாடச் சொல்ல, ஆணையர் உத்தரவு பிறப்பிக்க வேண்டும்! அவர் தனியாகப் பாடாமல், உடன் இன்னொருவர் துணைக்கு நின்றால் நலம்! பொது மக்களும் கூடவே தேவாரம் பாடினால், இன்னும் இன்னும் நலம்!

3. ஆலய வளாகத்தில் உள்ள கல்வெட்டுகள், ஓலைச் சுவடிக் குறிப்புகள், இன்னும் இதர வரலாற்று ஆதாரங்களை, உடனே டிஜிடைஸ் (Digitization) செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்! தொல்பொருள் துறையின் உதவியை நாடி, குறைந்த பட்சம் படங்கள் எடுத்து வைத்துக் கொள்வது நலம் பயக்கும்!

4. சிறிய அளவிலான தேவாரத் திருமுறைகள் பள்ளியை, தில்லையில் துவக்க வழி வகை உள்ளதா என்று அறநிலையத் துறை ஆராய வேண்டும்! இதற்கான பூர்வாங்க முயற்சிகளை முடுக்கி விட வேண்டும்!

5. சைவத் திருமடங்கள் - திருப்பனந்தாள், திருவாவடுதுறை, தருமபுர ஆதீனம், காஞ்சி மடம், சிருங்கேரி மடம், இன்னும் பல மடத் தலைவர்கள் ஒன்று கூடி, தமிழக அரசுக்கு வழிகாட்டுச் செயல் முறை (Policy Guidelines) ஒன்றை வகுத்துக் கொடுக்க வேண்டும்!

வைணவத் தலைநகரம் திருவரங்கம்! அதே போல் சைவத் தலைநகரம் தில்லை!
திருவரங்கத்தில் கோயில் ஒழுகு என்ற தினப்படி நடத்தை விதிமுறைகளை இராமானுசர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே செய்து வைத்தார்! அனைத்து ஊழியர்களுக்கும் தனித்தனியான ஒழுகு முறைகள்! இன்னிக்கும் அது நடைமுறையில் இருக்கு!

தமிழ் வழிபாடு, தமிழ் விழாவான பகல் பத்து-இராப் பத்து, கருவறைக்குள் அர்ச்சகர்களே முன்னின்று சொல்ல வேண்டிய தமிழ்ப் பாசுரங்கள் என்னென்ன = என்று அனைத்தும் அதில் இருக்கு!
It is a kind of Code Book! Koil Ozhugu!
அதைத் திருவரங்க ஜீயர்களிடம் கேட்டுப் பெற்று, ஒரு உசாத் துணை (Reference) போலப் பயன்படுத்திக் கொள்ளலாம்! இது யோசனை தான்! கட்டாயம் இல்லை! ஆனால் அது போல ஒரு செயல்முறை Code Book-ஐத் திருமடங்கள் உருவாக்கித் தரவேண்டும்!

6. நடராஜப் பெருமானின் ஆலயக் குடமுழுக்கு, பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை கட்டாயம் நடக்க ஏற்பாடு செய்ய வேண்டும்! கடைசியாக நடந்தது 1987! இருபத்தி இரண்டு வருடங்கள் ஓடி விட்டன!
மூச்சுக்கு மூச்சு, கர்மானுஷ்டானம், கர்மானுஷ்டானம், என்று வாய் கிழியப் பேசும் தீட்சிதர்கள், 22 ஆண்டுகளாக குடமுழுக்கு இல்லாமல், ஒரு ஆலயம் நடத்தி வருகிறார்கள்!

ஆலயக் குடமுழுக்கு படோபடத்துக்கு அல்ல! சன்னிதிகள் சீரமைப்பிற்கே! வீட்டுக்கே அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறையாச்சும் வெள்ளை அடிக்கிறோம்! இது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒரு முறை தானே? எனவே அரசு குடமுழுக்குக் குழுவை உடனே அமைத்தல் வேண்டும்!


நிர்வாகம் தொடர்பானவை:
1. கோயிலின் பொருள் ஆதாரங்களை, தனித்த ஆய்வாளர்கள் (Independent Evaluator) கொண்டு கணக்கெடுத்து, அதை வெள்ளை அறிக்கையாகப் பொது மக்கள் முன் வைப்பது!

2. ஆலய அளவில், சிறிது காலத்துக்குத் தினப்படி சந்திப்புகள் (Daily Status Meeting) நடத்துவது!

3. தீட்சிதப் பிரதிநிதிகளுடன் ஆணையர் அமர்ந்து பேசி, கொள்கை முடிவுகள் இன்னின்ன என்று தெளிவாக விளக்கி விடுவது!
அவர்கள் எதிரியாகப் பார்க்கப்பட மாட்டார்கள்! எனவே பழைய கசப்பை மறந்து பூரண ஒத்துழைப்பு தர வேண்டும் என்று கோருவது!

4. ஆயிரம் தான் இருந்தாலும், தீட்சிதர்களும் இறைவனுக்குப் பணி செய்யும் வேலையில் இருப்பவர்கள் தான்! அவர்கள் எதிர்காலம், அவர்கள் மாத ஊதியம், அறநிலையத் துறையில் அவர்களுடைய ஊழியர் நிலை என்ன - இது போன்றவற்றையும் தெளிவாக விளக்கி விடுதல் நலம் பயக்கும்!

5. தில்லை நடராஜப் பெருமானின் திருக்கூத்தைப் பார்த்தாவாறு, அந்த மண்டபத்துக்கு வெளியேயே, மிக அருகில் கோயில் கொண்டுள்ளார் கோவிந்தராசப் பெருமாள்! மண்டபத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் நின்றால், நேராக நடராசரையும், இடப் பக்கம் திரும்பி, பெருமாளையும் சேவிக்கலாம்!

இந்தப் பெருமாள் கோயில் மட்டும் ஏற்கனவே அரசுக் கட்டுப்பாட்டில் தான் இருக்கு! அதனால் அதன் ஊழியர்களையே, ஆரம்ப கால அவசரப் பணிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்!
தேவை: சில விரைவான நடவடிக்கைகள்! மேல் முறையீடுகளுக்கு முன்பாக, குறிப்பாக நந்தனார் சிலை நிறுவுதல்!


தில்லை பற்றிய கருத்துச் சண்டைகள் நிறையவே நடந்துள்ளன! ஆனால் இப்போது கடமை நேரம்!
உங்களுக்குத் தோன்றும் வேறு யோசனைகள் என்ன? முன் வையுங்களேன், நண்பர்களே, சக பதிவர்களே!
* அவசரத் தேவை!
* நெடுங்காலத் தேவை!
* ஆன்மீக விடயம்!
* நிர்வாக விடயம்!

ஒன்றாகத் தொகுத்து, அறநிலையத் துறைக்கும், உதவி ஆணையர் திருமகள் அவர்களின் மின்னஞ்சலுக்கும் யோசனைகளாக அனுப்பி வைக்கலாம்! என்ன சொல்றீங்க?

திருச்சிற்றம்பலம்! திருச்சிற்றம்பலம்!
Read more »

தைப்பூசம்: வள்ளலாருக்கு வந்த ஆசைகள்!

தருமம் மிகு சென்னை என்று எழுதும் போதே, சென்னைச் செந்தமிழ் அப்படியே வந்து தென்றலாய் ஒட்டிக் கொள்கிறது:-) என்ன செய்ய!

"அது சரி...அது இன்னாப்பா 'தருமம் மிகு சென்னை'? மெட்ராஸ்-க்குள்ள அம்மாந் தருமம் கீதா? இல்லாங்காட்டி நீயா எதுனா பிகிலு வுடுறியா?மேட்டருக்கு ஸ்டெரெயிட்டா வா மாமே" என்று அங்கு செளகார்பேட்டையில் யாரோ மொழிவது, இங்கு என் காதில் தேன் வந்து பாய்கிறது! :)
அதனால ஸ்டெரெயிட்டா மேட்டருக்கு வருகிறேன்!

இன்று தைப் பூசம்! (Feb-8-2009)!
வடலூர் வள்ளல் இராமலிங்க முனிவன் ஜோதி வழிபாட்டைத் துவங்கி வைத்த திருநாள்!
Jan-25-1872 அன்று வந்த தைப்பூசத்தில் முதல் ஜோதி வழிபாடு துவங்கியது, வடலூரில்!

வடலூர் சத்திய ஞான சபைக் கருவறையில்.......ஏழு திரைகள்!
1. கறுப்புத் திரை = மாயா சக்தி
2. நீலத் திரை = கிரியா சக்தி
3. பச்சைத் திரை = பர சக்தி
4. சிகப்புத் திரை = இச்சா சக்தி
5. பொன்மைத் திரை = ஞான சக்தி
6. வெண்மைத் திரை = ஆதி சக்தி
7. கலப்புத் திரை = சிற் சக்தி
திரையின் பின் நிற்கின்றாய் கண்ணா! தெர தீயக ராதா? திரை விலக லாகாதா? இந்தத் திரைகளின் பின்னால்...
தீப மங்கள ஜோதீ நமோ நம!
அருட் பெருஞ் சோதி! தனிப் பெருங் கருணை! கீழே கண்டு தரிசியுங்கள்!




இந்த நல்ல நாளில் இன்னொரு விசேடம்! சோழ நாட்டுத் திருப்பதி, ஒப்பிலியப்பன் கோயில் குடமுழுக்கு (குடநீர் தெளித்தல்-சம்ப்ரோக்ஷணம்)! இதோ சுட்டி!

தருமம் மிகு சென்னை-ன்னு நான் சொல்லலைப்பா! வள்ளலார் சொல்றாருப்பா!
என்னாத்துக்கு இந்த களவாணித்தனம் புடிச்ச ஊரை "தருமமிகு"-ன்னு சொல்லணும்? :)
ஏன்னா, அங்கு வந்து குடி கொண்டான் ஒரு மிகப் பெரும் செல்வந்தன்! அவனிடம் 'எனக்கு அது கொடு, இது கொடு', என்று கேட்டுக் கேட்டு வாங்குறாருப்பா வள்ளலார்!

வள்ளலாரா இப்படி...சேச்சே இருக்காதுப்பா....உண்மையான துறவிப்பா அவரு!

அப்ப நான் சொல்லறது பொய்யா? 'வேண்டும் வேண்டும்'-ன்னு அவர் கேட்டு கேட்டு வாங்குற பாட்டை நீங்களே பாருங்க!
சரி...அந்த செல்வந்தன் யாருன்னு நினைக்கிறீங்க? சாட்சாத் நம்ம முருகப்பெருமான் தான்!! :)

சென்னையில் இரண்டு கோட்டம் உண்டு! ஒன்று வள்ளுவர் கோட்டம், மற்றொன்று கந்த கோட்டம்!
சென்னை பாரிமுனையில், (ஜார்ஜ் ட்வுன், பூக்கடை ஏரியா), ராசப்ப செட்டித் தெருவில் உள்ள இக்கோவில், சுமார் 350 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஒன்று!
கந்த கோட்டம் என்று பெயர். ஆனால் கன்ஸாமி கோயில் (கந்தசாமி கோயில்) என்று தான் சென்னை மக்களிடையே பிரபலம்! :)

மிகப் பெரிய கோவில், குளம், மண்டபங்கள்! ஆனா, வெளியில் இருந்து பார்த்தால் கோபுரம் கூட கஷ்டப்பட்டுத் தான் கண்ணுக்குக் தெரியும்!
ஏன்னா சுற்றிலும் அடுக்கு மாடிக் கடைகள், பாத்திரக் கடைகள், என்று வணிக வளாகம் போல் ஆகி விட்டது! வடபழனிக் கோவிலுக்கும் முந்தியது! சென்னையின் முதல் முருகன் கோவில்களுள் ஒன்று எனலாம்!

திருப்போரூர் வேப்ப மரப் புற்றில் இருந்து மாரிச்செட்டியாரால் கொண்டு வரப்பட்ட முருகன்! ஒரு கை வேலும், மறு கை அபயமும் காட்டி, வள்ளி, தேவயானையுடன் சாந்த சொரூபத் திருக்கோலம்!
வள்ளலார், பாம்பன் சுவாமிகள், திருப்போரூர் சிதம்பர சுவாமிகள், வள்ளிமலை சுவாமிகள், அண்மையில் திருமுருக கிருபானந்த வாரியார் என்று பல மகான்கள் வழிபட்ட தலம் என்று சென்னை வாசிகளுக்கே அவ்வளவாகத் தெரியாது!

மூலவர்
கந்தசுவாமி (ஓவியம்)


உற்சவர் முத்துக்குமாரசுவாமி



அடுத்த முறை சென்னை சென்றால், பாரீஸ் கார்னர் ஷாப்பிங் முடித்து, அவசியம் இந்த அழகனைக் கண்டு வாருங்கள்!


வேண்டாம் என்று சகலமும் துறந்த வள்ளலார், கந்த கோட்டம் வாழும் கந்தனைக் கண்டதும், 'வேண்டும் வேண்டும்', என்று வேண்டி வேண்டிப் பாடுகிறார்! இதோ!
(அருணா சாய்ராம் - இந்தச் சுட்டியில் கேட்டு மகிழுங்கள். க்ளிக் செய்த பின், புதிய விண்டோவில், ராப்சடி ப்ளேயரில் திறக்கும்)

Still Better,
கொஞ்சும் சலங்கை படத்தில், சிக்கல் சிங்காரவேலன் சன்னிதி செட் போட்டு, பாடும் பாடல் காட்சி!
பாடுவது: P. லீலா! (சூலமங்கலம் குரல் மாதிரியும் இருக்கு! யாரு-ன்னு யாராச்சும் சொல்லுங்கப்பா)


ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற
உத்தமர் தம்உறவு வேண்டும்
உள்ஒன்று வைத்துப் புறம்ஒன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்


பெருமைபெறு நினது புகழ் பேச வேண்டும்
பொய்மை பேசாது இருக்க வேண்டும்
பெருநெறி பிடித்து யான் ஒழுக வேண்டும்
மதமான பேய் பிடியாது இருக்க வேண்டும்


மருவு பெண் ஆசை மறக்க வேண்டும்
உனை என்றும் மறவாது இருக்க வேண்டும்
மதி வேண்டும் நின் கருணைநிதி வேண்டும்
நோயற்ற வாழ்வில் நான் வாழ வேண்டும்


தருமமிகு சென்னையில் கந்தகோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்த வேளே
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே.




மிகவும் எளிமையான பாடல் தான்; நான் பொருள் சொல்லப் போவதில்லை! கவிதை நயம் மட்டும் சிறிது சுவைப்போம்.
தனக்காக எதுவும் வேண்டும் என்று கேட்கவில்லை. போனஸ் கொடு, நிலம் கொடு, பணம் கொடு, செல்வாக்கு கொடு, தேர்தலில் வெற்றி கொடு,
எனக்கு வெற்றி கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை, அவனுக்குத் தோல்வி கொடு, என்று எல்லாம் கேட்கவில்லை! :)

இந்தத் தலை நகர முருகனிடம், நற் சிந்தனைகள்
தலைக்குள் நகர மட்டுமே வேண்டிப் பாடுகிறார்.

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற அடியார்கள் உறவு = அது என்ன ஒருமை?... அப்படின்னா பன்மை-ன்னு வேற இருக்கா?
ஆமாம் இருக்கு! பல எண்ணங்களுக்குள் ஆழ்ந்து போய், கடவுள் அன்பை, பத்தோட பதினொன்னு, அத்தோட இது ஒன்னு-ன்னு வச்சிக்காம...

உலக வாழ்வில் பல கடமைகள், பன்மையாக இருந்தாலும், அவற்றை எல்லாம் நிறைவேற்றிக் கொண்டே,
இறைவன் விழைவை, ஒருமையாக, (primary) மனத்துக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்!

முடிகிறதோ இல்லையோ, மனத்தில் வைத்துக் கொண்டால் என்றாவது ஒரு நாள் துளிர் விடும் அல்லவா?
அப்படிப்பட்ட நல்ல இதயங்கள் உள்ளவரோடு பழகினாலே, அரைக்க அரைக்க அம்மிக்கும் வாசம் வந்து விடும். அதனால் தான் அடியார் உறவை வேண்டுகிறார்.

உள் ஒன்று வைத்துப் புறம் ஒன்று பேசுவார் உறவு கலவாமை = இது போன்ற ஆட்களை வெறுத்து ஒதுக்கச் சொல்லவில்லை; ஆனால் உறவு கொண்டு, நாமும் அதில் கலந்து விடக் கூடாது என்று தான் எச்சரிக்கிறார்.
அதனால் நாமும் கெட்டு, அவன் திருந்தும் வாய்ப்பையும் நாமே கெடுத்து விடுவோம்.

பெருமை பெறு நினது புகழ் பேசல் = இப்படிப் பேசிக் கொண்டு இருந்தாலே, 'வாசி வாசி' என்பது போய், 'சிவா சிவா' வந்து விடும். அரைக்க அரைக்க அம்மியும் மணக்கும்! அதுனால பதிவு போட்டு, போட்டு, போட்டுக்கிட்டே இருப்போம்! :)))

பொய்மை பேசாது இருத்தல் = பொய்யும் சொல்லிட்டு, சப்பைக்கட்டு கட்ட மேலும் மேலும் பொய் சொல்ல, வட்டி குட்டி போட்டு விடும்; அதனால் வேண்டாம் என்கிறார்.

பெருநெறி பிடித்து ஒழுகல் = அவன் நெறி (ஒழுக்கம்) பிடித்துக் கொண்ட பின், தவறவிட்டு விடக் கூடாது. அதில் "ஒழுகணும்"!
ஞானம் - அனுட்டானம் ரெண்டுமே வேண்டும்! இல்லீன்னா right from scratch என்று முதலில் இருந்து துவங்க வேண்டியதாகி விடும்.

மதமான பேய் பிடியாது இருத்தல் = இது மிக மிக முக்கியம்;
'ஆன்மீகம்' என்ற தேவதை போய், 'மதம்' என்று பேய் பிடித்துக் கொண்டால் அவ்வளவு சீக்கிரம் இறங்காது! "மதம்" பிடித்த யானை ஊரையே ஒருவழி பண்ணிவிடும்!

பரமத பங்கம், பரமத வெறுப்பு கூடவே கூடாது! "மதம்" என்ற காரணி, ஆன்மீகத்தில் வரவே கூடாது! - இதை இந்த வலைப்பூவுல சொல்லிப் பார்த்தேன்! ஆனால் கடும் எதிர்ப்பு தான் மிஞ்சியது! - சென்று பாருங்கள்! விஷயம் புரியும்!

மருவு பெண் ஆசை மறத்தல் = பெண்ணை ஆணோ, ஆணை பெண்ணோ, விட்டுவிட்டு ஓடச் சொல்லவில்லை!
ஆனால் அதையே பிடித்து உழன்று கொண்டு இல்லாமல்(மருவு), பருவ தாகம் தீர்ந்தவுடன், கொஞ்சம் கொஞ்சமாக...
காமத்தை மறந்து, காதலை முன்னுக்குத் தள்ளச் சொல்கிறார்! கவனிக்கவும்: 'மறந்து' தான்; 'துறந்து' இல்லை! பெண்-ஆசை மறத்தல்! பெண்-அன்பு மறத்தல் அல்ல!

உனை என்றும் மறவாது இருத்தல் = இது தான் கொஞ்சம் கஷ்டமோ கஷ்டம்! ஆனால் முயற்சி வேண்டும்!

மதி = குதர்க்கம் பேசாத நல்லறிவு
கருணை நிதி = நம்ம தமிழக முதல்வர்-ன்னு யாரும் நினைச்சிக்காதீங்க! :)
வள்ளலார் சொல்வது இறைவனின் கருணை தான் நமக்கு வைத்த மா நிதி! பிக்சட் டெபாசிட்! அதுவே கருணாநிதி = அருட்செல்வம்!! மிக அழகிய சொல் இது!

நோயற்ற வாழ்வில் வாழல் = இது துறவிக்கும் தேவையான ஒன்று! சுவர் இருந்தால் தானே சித்திரம்?

பல தான தருமங்கள் நடக்கும் தலை நகரமாம் சென்னையில் உள்ள கந்த கோட்டத்து கந்தசாமியே!
அடியேன் இப்படி 'வேண்டும் வேண்டும்' என்று கேட்டது எல்லாம் தாப்பா!
எனக்கு மட்டும் இல்லை! அன்பர் எல்லார்க்கும் தா!(அவர்கள் கேட்காவிட்டாலும், அவர்கள் சார்பாக நான் தான் கேட்டு விட்டேனே!)
அன்பர் அனைவருக்கும் அருள் செய்யப்பா, சண்முகத் தெய்வமணியே!!



இன்னொரு சூப்பர் பாட்டும் இருக்கு! இதுவும் வள்ளலார் கந்த கோட்ட முருகன் மேல் பாடியது தான்! உண்டு, உண்டு-ன்னு ஒவ்வொரு வரியிலும் வேகமா வரும்! இது YES, YES என்னும் Positive Attitude பாடலோ?
நீங்களே படிச்சிப் பார்த்து, அப்படியே எனக்கும் கொஞ்சம் பொருள் சொல்லிக் கொடுங்களேன்!

நீர் உண்டு, பொழிகின்ற கார் உண்டு, விளைகின்ற
நிலன் உண்டு, பலனும் உண்டு!
நிதி உண்டு, துதி உண்டு, மதி உண்டு, கதி கொண்ட
நெறி உண்டு, நிலையும் உண்டு!


ஊர் உண்டு, பேர் உண்டு, மணி உண்டு, பணி உண்டு,
உடை உண்டு, கொடையும் உண்டு!
உண்டு உண்டு மகிழவே உணவு உண்டு, சாந்தம் உறும்
உளம் உண்டு, வளமும் உண்டு!

தேர் உண்டு, கரி உண்டு, பரி உண்டு, மற்றுள்ள
செல்வங்கள் யாவும் உண்டு!
தேன் உண்ட வண்டுறு கடம்பு அணியும் நின்பதத்
தியானம் உண்டாயில் அரசே!


தார் உண்ட சென்னையில் கந்த கோட்டத்துள் வளர்
தலம் ஓங்கு கந்தவேளே!
தண்முகத் துய்யமணி உண்முகச் சைவமணி
சண்முகத் தெய்வ மணியே!

என்ன மக்களே! பாட்டு புரியுது தானே?
எங்கே...புரியாத சிறுவன் எனக்குப் புரிய வைங்க பார்ப்போம்! :)
Read more »

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

வந்தியத்தேவன் (நீர்க்குமிழி )said...
கே.ஆர்.எஸ்,
கடவுள் பற்றோ, மறுப்போ இல்லாத agnostic நான். ஆனாலும் உங்கள் பதிவுகள் எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு

வெறும் திருப்பாவையையும் அர்த்தத்தையும் எழுதாம உங்க பாணில சொல்றீங்க பாருங்க.
குலசேகரன் படியை விட சில சமயங்களில் இலவச மிதியடிக் காப்பகம் தான் ஈர்க்கிறது! :)

உங்கள் விளக்கங்களைத் தாண்டி என்னைப் படிக்க வைப்பது உங்க எழுத்துக்களில் இருக்கற நேர்மை.
Posted by வந்தியத்தேவன் (நீர்க்குமிழி ) to மாதவிப் பந்தல் at 11:20 PM, January 06, 2009

ஆன்மீகம், கடவுளுக்கா? அல்ல! அடியார்களுக்கு!

Sri Kamalakkanni Amman Temple said...

ஆழி மழை கண்ணா! என்ற திருப்பாவையில்..
பற்பநாபன் கையில்.. என்ற வரியில்..
பற்பநாபன் யாரு? பல்பம் சாக்பீஸ் விக்கிறவனா என்று சொல்வீங்க!

இன்றும் பல்பம் சாக்பீஸ் பார்த்தா பத்மநாபன் ஞாபகம் வருகிறது;

இன்றும் திருப்பாவை விளக்கங்கள் மனதில் நிற்கிறது என்றால் அந்த லோக்கல் மொழியும் , எளிமையுமே காரணம்...

Back to TOP